திருக்கரைசையம்பதி, திருகோணமலை
திருமதி. வசந்தா நடராசன் B.A.,
திருகோணமலை, திராவிட மக்களாகிய தமிழர்களின் தொன்மையான வாழ்விடமாக விளங்குகின்றது. இப்பிரதேசத்திலுள்ள கோவில்களுள் பலவும் மன்னர்களால் கட்டப்பட்டு மானியங்கள் வழங்கப்பட்டு சிறப்போடு பேணப்பட்டது. திருகோணமலையைச் சார்ந்த பல கிராமங்கள், தமிழ் மக்கள் மட்டுமே வாழ்ந்த கிராமங்களாகக் காணப்பட்டு, பேரினவாதிகளால் திட்டம்போட்டு தமிழர்களுடைய வாழ்விடங்கள் அழிக்கப்பட்டும், குடியேற்றத்திட்டங்களாக மாற்றப்பட்டும் வருவது கண்கூடு. இவ்வாறான பல சைவத்தமிழ் கிராமங்கள் தமிழ்மக்கள் வாழ்ந்த சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசங்களில் காணப்பட்ட சைவக் கோவில்களும் குண்டுவீச்சுகளுக்கு இலக்காகி அழிந்துள்ளன.
தற்காலத்தில் நிகழும் இன அழிப்புப் போரின் காரணமாக சம்பூர், மூதூர், கொட்டியாரப்பற்று போன்ற கிராமங்களிலிருந்த தமிழ்மக்கள் வெளியேறியும், வெளியேற்றப்பட்டும் காணப்படுகின்றார்கள். இப்பிரதேசங்களிலுள்ள ஆலயங்கள் தீபமேற்றுவாரின்றி
அழிவைநோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. குண்டு வீச்சுக்களின் காரணமாக திருகோணமலைக்கிராமங்களிலுள்ள ஆலயங்கள் அழிந்துள்ளன. எஞ்சிய ஆலயங்களிலும் தீபமேற்றும் சந்தர்ப்பம் இல்லாது மக்கள் வெளியேறியுள்ளனர். ஆலயங்களில் தீபமேற்றச் சந்தர்ப்பம் கிடைக்காத நாடு, நாளடைவில் துன்பத்தைநோக்கிச் சென்று, காலகதியில் அழிந்து சின்னாபின்னமாவிடும் என ஆன்றோர் கூறியுள்ளனர். இவ்வாறான ஒரு நிலையை இன்று ஈழம் எதிர்நோக்கியுள்ளது..
திருகோணமலையைச் சார்ந்துள்ள கிராமங்களின் பெயர்களை நோக்கும்போது அரிய தமிழ்ப்பெயர்களைக் கொண்டனவாகக் காணப்படுகின்றன. திருமங்கலாய் என்பதிலுள்ள திருமங்கலம் என்பது, அரசர்களோடு தொடர்புடைய சொற்பதமாகவும், மங்கலம் என்பது சிவனைக் குறிப்பதாகவும் காணப்படுகின்றது. அரசர்களால் அமைக்கப்பட்ட சிவன்கோவில் இருந்த இடத்திற்கு திருமங்கலாய் என்ற காரணப் பெயர் ஏற்பட்டிருக்கலாமோவென்ற எண்ணமும், அதன் பெயர் அமைவும் வியப்பளிப்பதாகக் காணப்படுகின்றது.
திருமங்கலாய் சிவன்கோவில் அமைந்துள்ள கொட்டியாரப்பற்றிலுள்ள கிராமங்களின் சரித்திரப்பின்னணிகளையும், அங்கேயிருந்து அழிந்துபோன ஆலயங்களின் வரலாறுகளை ஆராயும்போது, திருக்கரைசையம்பதியை மத்திய ஸ்தானமாகக் கொண்ட ஒரு சைவசாம்ராச்சியமே இங்கிருந்து கோலோச்சி மறைந்துவிட்டதைக் காணமுடியும்.
திருமங்கலாய் சிவன்கோவிலின் அமைவு இதற்கொரு சான்றாகக் காணப்படுகின்றது. கிளிவெட்டியிலிருந்து திருமங்கலாய்க்குப் போகும் மார்க்கத்தில் நாலு கிலோமீற்றர் தூரத்தில் காட்டுப்பாதையினூடாக இக்கோவில் காணப்படுகின்றது. தற்போது இந்த ஆலயம் பெரும்பாலும் அழிந்த நிலையிலேயே காணப்படுகின்றது. இவ்வாலயத்தின் காப்பக்கிரகம் சிதைந்துள்ளது. அர்த்தமண்டபம் சிதைந்தநிலையில் பாதுகாக்கப் பட்டுள்ளது. மகாமண்டபமும் மற்றும் ஆலயக் கட்டிடங்களும் அத்திவாரமட்டத்தில் சிதைந்து மண்ணில் மறைந்து கிடக்கின்றன. இவ்வாலயத்தின் அத்திவாரத்தை நோக்கும்போது, பெரும் கருங்கற்களால் அமைக்கப்பட்டுக் காணப்படுகின்றது.
இக்கோவிலின் கட்டிட அமைப்பு முறையை ஆராயுமிடத்த, இவ்விடத்திலே மிகப் பெருங்கோவிலொன்று காணப்பட்டு அழிந்தமைக்கான சுவடுகள் காணப்படுகின்றன.
இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் அனைத்தும் கொண்டு அமைந்திருந்ததோடு, இவ்வாலயம் சிறப்பான நிலையில் இருந்தமைக்கான சான்றாக, இவ்வாலயத்திற்கான தலபுராணம் காணப்படுகின்றது. தலபுராணம் பாடப்பட்ட ஆலயங்கள் பிரசித்தியும், மகத்துவமும் பெற்ற ஆலயங்களாகவே காணப்பட்டுள்ளன. இவ்வாறான சிறப்புக்களைக் கொண்ட இவ்வாலயம், எவ்வாறு அழிந்ததென்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.
மிகப்பெரும் ஆலயங்கள் செல்வச் செழிப்போடு இருந்துள்ளன. இவ்வாறான அழித்ததுமான தேடிப்பிடித்த அந்நியர், அச்வாலயங்களைக் கொள்ளையடித்தும், செயல்களை வரலாறுகளிலே காணலாம். இரு இனங்களுக்கிடையே காலங்காலமாக நடைபெறும் உள்நாட்டு யுத்தங்களும், இவ்வாறான பெருங்கோவில்களை இடித்தழிப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு விளங்கியுள்ளன.
தற்கால அரசியல் சூழ்நிலையும் இவ்வாறான இடங்களுக்குச் செல்வதை தடை செய்துள்ளன. இப்பிரதேசங்களிலே வாழ்ந்த மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வேறிடங்களுக்குச் செல்லும் சூழ்நிலை நிலவுகின்றது. ஐதீகக் கதைகளையும், வாய்மொழி வரலாறுகளையும் தம்முள் தேக்கிவைத்திருக்கும் பெரியவர்கள், காலவோட்டத்தில் மறைந்தும், மறந்தும் காணப்படுகின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில் திருமங்கலாய் சிவன் கோவிலின் அழிவு, எவ்வாறு நிகழ்ந்தது என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.
வளரும்
















