யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகே உள்ள ஐநா மாவட்ட அலுவலகத்தில் இருந்து தொடங்கி ஊர்வலத்தில் 2000க்கும் குறையாதவர்கள் கலந்து கொண்டார்கள். பேரணியின் முன்னணியில் எலும்புக் கூடு போல ஆடை அணிந்த நான்கு பேர் காணப்பட்டார்கள். அந்த எலும்புக் கூட்டு ஆடை தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் வெளி நாடு ஒன்றிலிருந்து தருவிக்கப்பட்டது.புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழர் ஒருவர் அதை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அண்மை மாதங்களாக செம்மணியை முன்னிறுத்தி தமிழ் மக்கள் நீதி கேட்டு முன்னெடுக்கும் போராட்டங்கள் பெரும்பாலானவற்றில் இவ்வாறாக கலையம்சங்கள் இணைக்கப்படுவது நல்ல விடயம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை,செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையைக் கேட்டு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான “தமிழ்த் தேசியப் பேரவை” என்று அழைக்கப்படுகின்ற கட்சிகளின் கூட்டு யாழ்ப்பாணத்தில் ஒரு பேரணியை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தை நோக்கி சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலான ஒரு பேரணி அது.
யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகே உள்ள ஐநா மாவட்ட அலுவலகத்தில் இருந்து தொடங்கி கிட்டுப் பூங்காவரையும் அந்தப் பேரணி இடம்பெற்றது. பின்னர் ஒரு பொதுக்கூட்டமும் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரவையைச் சேர்ந்த தலைவர்களும்.ஒரு மதகுருவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடும் அமைப்பைச் சேர்ந்த ஓர் அம்மாவும் நில மீட்புக்காக போராடும் அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் பேசினார்கள்.
யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகே உள்ள ஐநா மாவட்ட அலுவலகத்தில் இருந்து தொடங்கி ஊர்வலத்தில் 2000க்கும் குறையாதவர்கள் கலந்து கொண்டார்கள்.பேரணியின் முன்னணியில் எலும்புக் கூடு போல ஆடை அணிந்த நான்கு பேர் காணப்பட்டார்கள்.அந்த எலும்புக் கூட்டு ஆடை தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் வெளி நாடு ஒன்றிலிருந்து தருவிக்கப்பட்டது. புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழர் ஒருவர் அதை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அண்மை மாதங்களாக செம்மணியை முன்னிறுத்தி தமிழ் மக்கள் நீதி கேட்டு முன்னெடுக்கும் போராட்டங்கள் பெரும்பாலானவற்றில் இவ்வாறாக கலையம்சங்கள் இணைக்கப்படுவது நல்ல விடயம்.
கடந்த 30ஆம் திகதி தந்தை செல்வா கலையரங்கில் நடந்த அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நினைவு நாள் நிகழ்விலும் சில ஏற்பாடுகள் கலைத்துவமாக இருந்தன. அதுபோலவே லண்டனில் நடந்த ஒரு போராட்டமும் கலைத்துவமாக சிந்திக்கப்பட்டிருந்தது. இது ஒரு நல்ல முன்னேற்றம்.தமிழ் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை இயன்ற அளவுக்கு கலைப் பெறுமதி மிக்கவைகளாகத் திட்டமிடுவது.
சிங்கள மக்கள் சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய தன்னெழுச்சிப் போராட்டங்களில் குறிப்பாக காலிமுகத் திடலில் அமைத்த “கோட்டா கோகம” கிராமத்தில் சிங்கள மக்களுடைய கலையுணர்வு அற்புதமாக வெளிப்பட்டது. ஒரு மக்கள் போராட்டத்தை;அரசுக்கு எதிரான போராட்டத்தை எப்படி கலையாக வெளிப்படுத்த முடியும் என்பதற்கு அது இந்த பிராந்தியத்திலேயே ஒரு முக்கிய முன்னுதாரணம்.
தமிழ் மக்களும் சளைத்தவர்கள் அல்ல.ஏற்கனவே சில தசாப்தங்களுக்கு அன்பு தமிழ் மக்களின் எழுச்சியை வெளிப்படுத்திய “பொங்கு தமிழ்” நிகழ்வுகள் கலையாம்சம் பொருந்தியவைதான். அவை “அரங்கச் செயற்பாட்டுக் குழு” என்று அழைக்கப்படுகின்ற ஓர் அமைப்பினால் பெருவெளி நாடகங்களாக திட்டமிடப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் உச்சம் எனலாம். அரங்கச் செயற்பாடாக தொடங்கி பின்னர் பெருந்திரள் வெகுஜன அரசியல் நடவடிக்கையாகப் பரிணமித்த ஒரு முன்னெடுப்பு அது.
எனினும் கடந்த 17 ஆண்டுகளாக கட்சிகள் செயற்பாட்டாளர்கள் மக்கள் அமைப்புகள் போன்றவற்றின் எதிர்ப்பு நடவடிக்கைகளில் படைப்புத் திறன் ஒப்பிட்டுளவில் குறைவாக இருந்தது. குறிப்பாக அரசியல் கைதிகளுக்கான போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் போன்றவற்றில் ஒப்பீட்டளவில் கலையம்சங்கள் இருந்தன. கடந்த ஆண்டு செம்மணியில் நடந்த “அணையா விளக்கு” போராட்டத்திலும் கலையுணர்வு வெளிப்பட்டது.
அண்மைக் காலங்களில் போராட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் கலை வெளிப்பாடுகளாகச் சிந்திக்கும் ஒரு போக்கு அதிகரித்து வருகிறது. அதை வரவேற்க வேண்டும். கவன ஈர்ப்பு என்பது தெருக்களின் ஓரங்களில் நின்று அல்லது மக்கள் கூடும் சந்திகளில் நின்று சுலோக அட்டைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்புவது மட்டும்ல்ல. அதற்குமப்பால் எதிர்ப்பை எந்த அளவுக்கு காலியாக வெளிப்படுத்தலாம் என்பது முக்கியம். ஏனென்றால் கலைப் பெறுமதி மிக்க, படைப்புத்திறன் மிக்க எதிர்ப்பு நடவடிக்கைகள் வெகு சனங்களைக் கவர்ந்து இழுக்கின்றன; ஊடகங்களின் கவனத்தையும் வெளிநாடுகளின் கவனத்தையும் கவர்ந்து இழுக்கின்றன. படைப்புத்திறன் மிக்க போராட்டங்களுக்கு வழமையான போராட்டங்களை விடவும் ஈர்ப்பு அதிகம்.
பாடசாலைகளுக்கு இடையிலான, நாடுகளுக்கு இடையிலான, விளையாட்டுப் போட்டிகளில் குறிப்பாக கிரிக்கெட்டில் பிக் மட்ச்களின் போது இரண்டு அணிகளையும் சேர்ந்த ரசிகர்கள் ஆடிப்பாடிக் கூத்தாடுவார்கள். அந்த ஆட்டம் பாட்டங்களில் தாள லயம் இருக்கும். மேளங்கள், இசைக் கருவிகள் இருக்கும். கொந்தளிக்கும் ரசிகர்களை இசை ஒரு மையத்தில் இணைத்து வைத்திருக்கும். அப்படித்தான் அரசியல் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் கலையம்சம் பொருந்திய நடவடிக்கைகள் போராட்டக்காரர்களை ஒரு மையத்தில் இணைக்கின்றன. வெளியில் இருந்து பார்க்கும் பார்வையாளர்களை தங்களின் நோக்கி ஈர்க்கின்றன.
இந்த அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் கலையம்சங்கள் இணைக்கப்பட்டிருப்பதை வரவேற்க வேண்டும். அந்த பேரணியானது கைலாசப் பிள்ளையார் கோவிலில் இருந்து தொடங்கி நல்லூர் வீதி வழியாக கிட்டுப் பூங்காவை வந்தடைந்தது. அதற்கு முதல் நாள்தான் நல்லூர் திருவிழா முடிவடைந்திருந்தது. நல்லூர் சூழலில் பந்தல்களும் கடைகளும் அகற்றப்பட்டிராத வீதிகளின் வழியே ஊர்வலம் நகர்ந்து வந்தது. இந்த இடத்தில் நல்லூர் தேர் திருவிழாவையொட்டி முகநூலில் பகிரப்பட்ட ஓர் ஒப்பீட்டை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
தமிழ் மக்கள் மத்தியில் பிரம்மாண்டமான சனத் தொகையைத் திரட்டக் கூடிய சக்தி இரண்டு பேர்களுக்கு இருந்தது என்றும்.”முதலாவதாக வேலை கையில் வைத்திருக்கும் முருகப்பெருமானுக்கும், இரண்டாவதாக வேலுப்பிள்ளையார் பெற்றெடுத்த மகனுக்கும் மட்டும்தான் இருந்தன” என்று அந்தப் பதிவு கூறுகிறது. அந்தப் பதிவின் பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லூர் கோவிலின் ஒரு பகுதியைச் சுற்றிக்கொண்டு போன அந்த ஊர்வலமானது பிரம்மாண்டமானது இல்லைத்தான். அதில் இரண்டாயிரத்துக்கும் குறையாதவர்கள் பங்குபற்றினார்கள்.
கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய சில நடவடிக்கைகளில் மட்டும்தான் மக்கள் அதிகமாகத் திரண்டிருக்கிறார்கள். குறிப்பாக பொத்துவில் தொடக்கம் பொலிவண்டி வரையிலுமான பேரணியைச் சுட்டிக்காட்டலாம்.அடுத்ததாக,இரண்டு “எழுக தமிழ்களைச்” சுட்டிக் காட்டலாம்.இவைதவிர, தேர்தல் திருவிழாக்களின் போது கட்சிகள் காஸைக் கொட்டி, வாகனங்களை விட்டு, ஜனங்களை அள்ளிக்கொண்டு வருகின்றன. அங்கேயும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவதுண்டு.
இவைதவிர வழமையான கவன ஈர்ப்பு நடவடிக்கைகளின் போது அல்லது அரசுக்கு எதிரான பேரணிகளின் போது பெருந்திரள் மக்களைக் காண முடிவதில்லை, பெருந்திரள் மக்களை ஒரு மையத்துக்குக் கொண்டு வருவது என்று சொன்னால் முதலாவதாக மக்களோடு நேரடியாகத் தொடர்புடைய கட்டமைப்புகள் இருக்கவேண்டும். இரண்டாவதாக,அதற்கு ஒரு “பட்ஜெட்” உண்டு. காசு இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் காசு வேண்டும்.
ஒரு காலம் இருந்தது, தொழிற்சங்க உறுப்பினர்கள் சந்தாப் பணம் செலுத்தி தொழிற்சங்கத்தின் பொது நிதியை பலப்படுத்துவது என்ற ஒரு போக்கு. அல்லது தொண்டர்கள் தாமாக முன்வந்து தங்களுடைய உழைப்பைத் தியாகம் செய்து அர்ப்பணிப்போடு வேலை நேரத்தில் போராட்டங்களில் ஈடுபடுவார்கள். போராட்டங்களில் ஈடுபட்டதாலேயே வேலைகளை இழப்பார்கள். அது ஒரு காலம். இப்பொழுது “வொலன்டியர்ஸ்”. தன்னார்வலர்கள் என்று வருபவர்களுக்குக் காசு கொடுக்க வேண்டும். தேர்தல் நடவடிக்கைகளின் போதும் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கும் காசு கொடுக்க வேண்டும்; சுவரொட்டிகளைக் கிழிப்பதற்கும் காசு கொடுக்க வேண்டும். இது உலகப் பொதுவான ஒரு போக்கு.அரச சார்பற்ற நிறுவனங்களின் எழுச்சிகளின் பின்னணியில் “வொலன்டியரிசம்” எனப்படுவது காசு கொடுத்துச் செய்வதாக மாறிவிட்டது.
இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள்,ஊர்வலங்களுக்கு ஆட்களை அழைத்துக் கொண்டு வரும்போது முதலாவதாக பயண ஏற்பாடு செய்ய வேண்டும். அதன்பின் அவர்களுக்குச் சிற்றுண்டிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.தூர இடங்களில் இருந்து வருபவர்களுக்குச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சிலசமயம் தங்குமிடத்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். எல்லாமே செலவுதான்.எல்லாமே காசுதான். காசு இல்லை என்றால் போராட்டம் இல்லை என்ற ஒரு நிலை. இதை மறுவளமாகத் திருப்பிக் கேட்டால்,காசை அள்ளிவீசத் தயாராக இருப்பவர்கள் துணிந்து அரசியலில் இறங்கலாமா?
இப்படிப்பட்டதோர் சமூகப் பொருளாதார அரசியல் பின்னணிக்குள், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியானது, பிரம்மாண்டமானது இல்லையென்றாலும் பொருத்தமான நேரத்தில், பொருத்தமான எதிர்ப்பை அது வெளிப்படுத்தியது என்பது உண்மை. இது ஜெனிவா கூட்டத் தொடரின் காலம். 63ஆவது ஜெனிவா கூட்டத்தொடரின் பின்னணிகள் கடந்த சனிக்கிழமை ஜனநாயகத் தமிழ்க் தேசிய கூட்டமைப்பு சாவகச்சேரியில் ஓர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒழுங்குபடுத்தியது. இரண்டு ஆண்டு கால அனுர ஆட்சிக்கு எதிராக அந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.அதுவும் சிறிய அளவிலான ஒரு கவன ஈர்ப்புப் போராட்டம்தான்.அங்கேயும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரளவில்லை.
அதுபோலவே அதே நாளில்,வெடுக்கு நாறி மலையயில், பிக்குகள் தலைமையில் ஒரு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்ப்புக் காட்டக் கூடும் என்று எதிர்பார்ப்போடு போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார்கள்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் அங்கே காணப்பட்டார்கள்.
தமது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தமது தலைமுறைகளின் எதிர்கால வாழ்வையும் தீர்மானிக்கக்கூடிய தமது அரசியலைக் குறித்து தமிழ் மக்கள் உணர்திறன் குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதனை இவை காட்டுகின்றன.பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் கழிப்பூட்டும் நிகழ்வுகளிலும் ஆயிரக்கணக்கில் திரளும் தமிழ் மக்கள், பெருந் திருவிழாக்களில் லட்சக்கணக்கில் திரழும் தமிழ்மக்கள்,ஏன் தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அரசியல் நடவடிக்கைகளில் சிலசமயம் நூற்றுக்கணத்தில் கூடத் திரள்வதில்லை? முருகனும் வேலு பிள்ளையாரின் மகனும்தான் இந்த மக்களை திரட்டலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? இந்த மக்களை ஏன் கடந்த 17 ஆண்டுகளாக அப்படி திரட்ட முடியவில்லை? இனி யார் அப்படித் திரட்டுவது? எப்பொழுது திரட்டுவது?















