(கனகராஜா சரவணன்)
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தன்னை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர், பதில் செயலாளர், முன்னாள் செயலாளர், உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் டிசம்பர் 16 ம் திகதிக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி 16ம் திகதி அன்று புதன்கிழமை (16) ஒத்திவைத்தார்.
கடந்த 2024 டிசம்பர் 28 ம் திகதி கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாக அப்போது கட்சியின் செயலாளராக இருந்த சத்தியலிங்கம் அறிவித்தார் இருந்தபோதும் அதற்கான கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என அரியேந்திரன் தெரிவித்திருந்தார்
அதன் பின்னர் இப்போது உள்ள கட்சியின் பதில் செயலாளர் எம்.சுமந்திரன் கடந்த 2024 மத்திய குழுவில் அரியேந்திரனை கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கட்சியில் இருந்து நீக்கியதாக 2026 ஜனவரி 9 திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை அரியேந்திரனுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் கட்சியின் மத்திய குழு, மட்டக்களப்பு மாவட்ட கிளை உப தலைவர், பட்டிருப்பு தொகுதி உப தலைவர், பட்டிப்பளை பிரதேச கிளை உப தலைவராக செயற்பட்டுவந்த தன்னை கட்சியின் உப விதிகளுக்கு முரணாக கட்சியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது என கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம், உப செயலாளர் எம். சுமந்திரன்,மற்றும் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம், மற்றும் தமிழரசுக் கட்சிக்கு எதிராக சிரேஷ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்காக 16ம்திகதி அன்று புதன்கிழமை (16) மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எடுக்கப்பட்டதையடுத்து வழக்கை எதிர்வரும் டிசம்பர் 16 ம்திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
















