திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில், குஜராத் மாநிலம் சூரத் நகரில் “ஓம்கார் ஸ்வரூப் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அம்ருத் கீதாயன்” என்ற இந்தி பாடல் ஆல்பம் மற்றும் “அம்ருத் மஞ்சரி” என்ற இந்தி புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
சூரத் நகரின் அடாஜன் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாராயண் மந்திர், சத்சங் பவனில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) மாலை 5 மணியளவில் இவ்விழா நடைபெற்றது.
இவ்விழாவில் குஜராத்தை சேர்ந்த பிரமுகர்கள் ஹாசு தாதா ஜோஷி, ஜெயராஜ் சின் காத்வி, ஓம்கார் பாபு, நவ்நித் பிரஞ்சிவன் பாய் திரிவேதி, ஜெயதீப் சோஜித்ரா, விஜய் பாய் வாசானி மற்றும் அசோக் பாய் ஜோஷி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பாடல் மற்றும் புத்தகம் வடிவில் எடுத்துரைக்கும் இவ்விழாவில், மனுஜோதி ஆசிரம தலைவர் பால் உப்பாஸ் நவராஜா பேசியதாவது:
“கடவுள் ஒருவரே என்ற கொள்கையை உடைய மக்களை அன்புடன் அழைக்கின்றது மனுஜோதி ஆசிரமம். மனுஜோதி ஆசிரமத்திற்கு வருகை தருவது உங்களுக்கு ஆன்மீக உணர்வினையும், மன அமைதியையும் மேம்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும்.
நம்மைப் படைத்த ஏக இறைவனுக்கு நன்றி செலுத்துவதை உலகிற்கு கற்பிக்கும் ஒரு பல்கலைக்கழகம்தான் மனுஜோதி ஆசிரமம். ஒரு நாளின் 24 மணி நேரமும் (24/7) வாரத்தின் 7 நாட்களும் இடைவிடாமல் எப்போதும் ஸ்ரீமந் நாராயணருக்காக வாழ வேண்டும் என்பதை அறிவிக்கிறது மனுஜோதி ஆசிரமம். வாரத்தின் ஏழு நாட்களும் நமக்காக பணி செய்தாலும் இந்து தர்மத்தின்படி சனி நாளை விரத நாளாக இறைவனுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பதை செயல்படுத்துகின்றது மனுஜோதி ஆசிரமம்.
இவ்விதமாக பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகின்ற விழாக்களின் வாயிலாக ஆன்மீகச் சிந்தனைகளை மக்கள் மனதில் விதைக்கிறது மனுஜோதி ஆசிரமம் என்கிற சத்திய நகரம்.
இறைவனை உணராமல், இறை தர்மத்தினை நிறைவேற்றாமல் இருப்பவர்கள் மீது தீர்ப்பு செய்ய இறைவன் வருகிறார் என்பதைப் போதிக்கின்றது மனுஜோதி ஆசிரமம். விஞ்ஞான யுகத்தில் மெய் ஞானத்தை உபதேசிக்கின்றது மனுஜோதி ஆசிரமம்.
ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனை, ஒவ்வொருவருக்கும் இறைவன் அளிக்கும் ஜோதியின் உணர்வினை ஏற்படுத்துகிறது. ஏக இறைவனுக்கே பயப்பட வேண்டும் என்கிற உள்ளுணர்வினை ஏற்படுத்துகின்றது” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் குஜராத், மும்பை, தெலங்கானா, ஆந்திரா, சத்தீஸ்கர், டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.















