இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 20-ந்தேதி முதல் அமலுக்கு வருமென அமைச்சர் கோயல் கூறினார். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்.டி.ஏ.) ஏற்படுத்துவது தொடர்பாக, கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் முறைப்படி பேச்சுவார்த்தைகள் தொடங்கின. தொடர்ந்து 5 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதன் முடிவில், கடந்த ஆண்டு டிசம்பர் 22-ல் இருதரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த ஏப்ரல் 27-ந்தேதி டில்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்து வர்த்தக மற்றும் முதலீட்டு துறை அமைச்சர் டாட் மெக்கிளே ஆகிய இருவருக்கும் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த எப்.டி.ஏ.வை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அமைச்சர் கோயல் நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, வெல்லிங்டன் நகரில் நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்கிளே மற்றும் நியூசிலாந்து நாட்டுக்கான இந்திய தூதர் முவான்புய் சையாவி ஆகியோர் முன்னிலையில் எப்.டி.ஏ. தொடர்பான ஆவணங்கள் உறுதி செய்யப்பட்டன. இதுபற்றி அமைச்சர் கோயல் கூறும்போது, இரு நாடுகளுக்கும் வெற்றி கிடைத்துள்ளது. இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 20-ந்தேதி முதல் அமலுக்கு வருமென கூறினார். இதனால், ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. நியூசிலாந்து நாட்டின் 9-வது பெரிய சரக்கு ஏற்றுமதி நாடாக இந்தியா உள்ளது. இந்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில், இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மசோதா கடந்த 16-ந்தேதி நிறைவேறியது. இதற்கு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் ஆதரவும் கிடைத்துள்ளது. இதன்படி, 93-29 என்ற வாக்குகள் கணக்கில்
இதனால், நியூசிலாந்து நாட்டில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 95 சதவீத பொருட்களுக்கு வரி விலக்குகள் அல்லது வரிகள் குறைப்பு இருக்கும். தற்போது பீங்கான், தரைவிரிப்புகள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட இந்திய பொருட்களுக்கு நியூசிலாந்து 10 சதவீதம் வரை வரி விதித்து வருகிறது. இனி, இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படும். இதன்படி இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும். இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருக்கும். இந்த ஒப்பந்தம், அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் கடந்த 16-ந்தேதி தெரிவித்து இருந்தது. இந்நிலையில், 20-ந்தேதி தசரா தினத்தில் ஒப்பந்தம் அமலுக்கு வருமென கோயல் கூறியுள்ளார்.
















