மதிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படத்திலிருந்து ‘கை வளவி குலுங்க’ என்ற புதிய பாடல் வெளியானது. ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக பிரபலமானவர் சூரி. தொடர்ந்து ‘ஜில்லா’, ‘வேதாளம்’, ‘அண்ணாத்த’, ‘ரஜினிமுருகன்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, அதன்பிறகு ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன. தற்போது மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது. ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் இந்த படத்திலிருந்து ‘மண்டாடி மண்டாடி’, ‘உசுரே நீதான் புள்ள’, ‘ஒலி வட்டம்’ என்ற அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக ‘மண்டாடி மண்டாடி’ பாடலில் நடிகர் சூரியின் நடனம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில், தற்போது ‘கை வளவி குலுங்க’ என்ற புதிய பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது. இந்தபாடலை சத்யன் மகாலிங்கம், சுகந்தி இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை ஜெயஸ்ரீ மதிமாறன் எழுதியுள்ளார்.
















