அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சப்வே ரெயில் தண்டவாளத்தில் போதை தலைக்கேறிய நிலையில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேர் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சப்வே ரெயில் நிலைய தண்டவாளத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் ஆபத்தான முறையில் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அதிவேக சப்வே ரெயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் உடல் நசுங்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நியூயார்க் நகர காவல்துறை, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், பலியானவர்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்த மலவிகா சித்ரே மற்றும் நவம் கவுல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள் என்பதும், கடந்த 2024-ம் ஆண்டு நியூஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள் என்பதும் தெரியவந்தது. ரெயில் ஓட்டுநர் “தண்டவாளத்தில் இருவரும் அமர்ந்திருப்பதை பார்த்தவுடன் ரெயிலை நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால், ரெயில் வேகம் அதிகமாக இருந்ததால் அதற்குள் விபத்து நடந்துவிட்டது” என காவல்துறை தெரிவித்தனர். அவர்கள் இருவரும் எதற்காக அந்த ஆபத்தான பகுதியில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தார்கள் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, விபத்து நடப்பதற்கு சற்று முன்பு அவர்கள் இருவரும் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், அவர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில் இருந்ததால், தங்களை நோக்கி ரெயில் வருவதையும், அதனால் ஏற்படும் உடனடி ஆபத்தையும் உணராமல் தண்டவாளத்திலேயே அமர்ந்திருந்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கின்றனர். இந்த விபத்து குறித்து நியூயார்க் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பட்டதாரி இளைஞர்கள் இருவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.















