சிவாஜிகணேசன் மகள் சாந்தி உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி (வயது 72). அவரது கணவர் நாராயணசாமி. சாந்தி கடந்த 10 நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் அதிகாலை மரணம் அடைந்தார். சாந்தியின் மரணம் சிவாஜி குடும்பத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாந்தியின் உடல் வளசரவாக்கம் மேற்கு காமகோடி நகர், அருணாகிரி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் காவேரி மருத்துவமனைக்கு சென்று சாந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தலைமை நிலையச்செயலாளர் பூச்சி முருகன், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோரும் சென்று இருந்தனர். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது: “தலைவர் கலைஞரும் – நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்கள். காலத்தால் கரையாத அவர்களது நட்பின் பாசம், இரு குடும்பங்களையும் தலைமுறைகள் கடந்த உறவாகப் பிணைத்திருக்கிறது. அந்தப் பாசப் பிணைப்பில் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அன்பு பாராட்டி வந்த சகோதரி சாந்தியின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புச் சகோதரியை இழந்து ஆற்றொணாத் துயரில் வாடும் அவரது கணவர் நாராய ணசாமி, மகள்கள் விஜி லட்சுமி, சத்யவதி, சகோதரர்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
















