‘ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து தண்டிக்க வேண்டுமென வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; “இளம் பிஞ்சுகளை நாசப்படுத்திய ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறை விசாரணையும் வேகம் எடுத்திருக்கிறது.
“குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்”
எனும் குறளுக்கு ஒப்ப தொழிலதிபர் வீரமணியால், தமிழ்நாட்டிற்கு இழிவையும், தலைகுனிவையும் ஏற்படுத்தி இருக்கும் இந்த வழக்கு, முதல்-அமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பின் கீழ் முறையாக சென்று கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கதாகும். பல ஆண்டு காலமாக குழந்தைகளை இக்கொடூரத்திற்கு இரையாக்கிய தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி மட்டுமில்லாமல், இதற்குத் துணை போனவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் கண்டறிந்து கைது செய்து குற்றக் கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில், “தொழிலதிபர் வீரமணியின் வழக்கை ஆழக் குழி தோண்டிப் புதைப்பதற்கு திட்டம் தீட்டிய காவல்துறை அதிகாரிகள், அரச பீடத்திலிருந்து உதவிய பெரிய மனிதர்கள், இடைத்தரகர்கள் எவரும் இந்த வழக்கில் தப்பித்து விடக்கூடாது என்று முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார்” என்ற செய்தி நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. இந்த வழக்கில் எவ்வித அழுத்தங்களுக்கும் விஜய் அரசு இடம் தராது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலில் இந்த வழக்கின் விசாரணை சரியான திசையில் நடத்தப்பட்டு வரும்போது, விசாரணை ஆணையம் மற்றும் சிபிஐ விசாரணை என்பது தேவையற்றது. அத்தகைய கோரிக்கைகளை நிராகரித்து, ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் விரைந்து விசாரணையை முடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
















