திமுகவின் கிளைக்கழகமாக அதிமுக மாறிவிட்டதென மதுராந்தகத்தில் முதல்-அமைச்சர் விஜய் பேசினார். மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் முதல்-அமைச்சரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், தனது கட்சியின் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து மதுராந்தகத்தில் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் மதுராந்தகம் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். என்னுடைய சொந்தங்களே! உங்கள் எல்லாரையும் சந்தித்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம். நான் இன்று முதல்-அமைச்சராக வரவில்லை. இடைத்தேர்தலுக்காக ஓட்டு கேட்டு வந்திருக்கிறோம். எப்போதும் போல உங்கள் வீட்டு பிள்ளையாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். ஏன் உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? தவெக ஆட்சிக்கு வரக்கூடாதா? ஒரு தனிக்கட்சியாக, சாமானியர்களின் கட்சியாக, பெண்கள், இளைஞர்கள், குடும்பங்கள் பேராதரவோடு, ஊழல், லஞ்சத்தை ஒழிக்க விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? ஏன் தீயசக்தி திமுக தினந்தோறும் தமிழக வெற்றி கழகம் குறித்து அவதூறாக, அசிங்கமாக, ஆபாசமாக பேசி வருகிறது? நான் சினிமாவில் ஜெயிச்சதுக்கும், இன்று அரசியலில் ஜெயிச்சதுக்கும் தமிழ்நாட்டு உறவுகள் தான் காரணம்.
அந்த உறவுகளால் தான் கட்சி ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகளுக்குள் 35 சதவீத வாக்குகள் பெற்று ஜெயிக்க முடிந்தது. ஜெயலலிதாவை, மு.க.ஸ்டாலின் ஆபாசமாக பேசிய காணொளி இப்போது வரை வைரலாகி வருகிறது. மு.க.ஸ்டாலின் மட்டும் அல்ல, திமுகவில் உயர் பொறுப்பில் உள்ளவர்களும் பெண்களை ஆபாசமாகத்தான் பேசுகிறார்கள். ஜெயலலிதாவை தவறாக பேசிய திமுகவோடு இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக முயற்சி செய்தபோதே அவர்களது முகமூடி கிழிந்துவிட்டது. முகமூடி கிழிந்தது தெரியாமல் அதிமுக கூவிக் கொண்டிருக்கிறது. மதுராந்தகம் தொகுதி மக்களே இந்த இடைத்தேர்தலில் தவெக சார்பாக உங்கள் சகோதரி, நம்ம வீட்டுப் பெண், என் தங்கச்சி மரகதம் குமரவேல் அவர்களுக்கு விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுவது பெண்களை ஆபாசமாக பேசும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனையாக இருக்கும். திமுகவுக்கும், மற்றும் பலருக்கும் ஓட்டு போட்டால் பெண்களை தவறாக பேசுபவர்களை ஆதரிப்பதாகவிடும். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்று அண்ணா கூறினார்.
108 சீட்டு வாங்கிய நாம் ஆட்சி அமைப்பது நடந்து விடக்கூடாது என்பதற்காக திமுகவும், மற்றும் பலரும் சேர்ந்து முயற்சி செய்தார்கள். அதிமுக, பாஜகவின் ஒரு கிளை. ஆனால் இப்போது திமுகவின் ஒரு கிளைக்கழகமாகவே மாறிவிட்டது. அவர்களைப் பொறுத்தவரையில் அனுபவம், அனுபவம்னு சொல்லி மக்கள் காசை கொள்ளையடித்தவர்கள் ஆட்சிக்கு வரலாம். ஆனால், நம்மை போன்று சாமானியர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது. தவெக ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்ய முடியாது. மக்கள் காசை தொட முடியாது. தொட்டால் மாட்டிக் கொள்வார்கள் என்று தெரியும். அதனால் தான் இருவரும் மாறி, மாறி திட்டம் போட்டு கொண்டிருந்தார்கள். மக்கள் காசை தொடமாட்டோம். தொடவும் விடமாட்டோம். தொட்டவர்களையும் விடமாட்டோம். சட்டப்பேரவையில் ஊழல் என்று சொன்னாலே திமுகவினர், ஆதாரத்தை காட்டு என்று கூறுவார்கள். சட்டப்பேரவையில் என்னை பேசு, பேசு என்பார்கள், ஆனால் நான் பேச எழுந்தால் விடமாட்டார்கள். மக்களை சென்று சேர வேண்டும் என்பதால் சட்டப்பேரவையில் காட்டு கத்து கத்தவேண்டியுள்ளது.
இதுக்கு முன்னாடி நாங்கள் மக்கள் காசை தொட்டதே இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? இனிமேல் மக்கள் காசை தொடமாட்டோம் என்று சொல்ல முடியுமா? இதுவரைக்கும் ஊழலே செய்தது இல்லை என்று சொல்ல முடியுமா? இனிமேல் ஊழலே செய்ய மாட்டோம் என்று சொல்ல முடியுமா? நீ ஏன் எப்போதும் ஸ்டாலின் சார் பற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாய். அவரே பாவம்! இந்த தேர்தலில் தோற்று, எதிர்க்கட்சித் தலைவராக கூட இல்லை என்று சில விமர்சனங்கள் இருக்கின்றன. அவர் தோத்தாலும், ஜெயிச்சாலும் என் அங்கிள்; ஸ்வீட் அங்கிள். இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே ஒன்று தூயசக்தி தவெக; இன்னொன்று தீயசக்தி திமுக. இவ்வளவு நாளாக இதை நான் மட்டும் தான் கூறிக் கொண்டிருந்தேன். இப்போது எதிர்க்கட்சித் திமுகவில் இருந்தே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ‘எங்களுக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும்தான் போட்டி என்று’; வாழ்க்கை ஒரு வட்டம்டா… தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்கான திமுகவின் மனக்கணக்கு பலிக்காது. தமிழ்நாட்டு மக்களுக்கும் எனக்குமான கணக்கு பாசக்கணக்கு. உங்கள் சின்னம் விசில் சின்னம். நமது சின்னம் விசில் சின்னம். விசில் சின்னத்துக்கு தான ஓட்டு போடுவீங்க? இவ்வாறு அவர் பேசினார்.
















