கிளிநொச்சி – பூநகரி, கிராஞ்சி செந்தாரகை விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த 27.09.2026 அன்று நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியின்போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இறுதிப் போட்டியில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.
குறித்த போட்டியின்போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட குழப்பநிலை பின்னர் கட்டுக்கடங்காத அளவுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி இரு தரப்பினரையும் கலைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மோதல் தீவிரமடைந்த நேரத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக போட்டியை பார்வையிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண மட்டத்திலான குறித்த தொடரை உரிய அங்கீகாரம் இல்லாத குழுவிடம் ஒப்படைத்ததன் விளைவாகவே இவ்வாறான குழப்பநிலை ஏற்படுவதற்கு காரணம் என விளையாட்டு ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
போட்டி ஏற்பாடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் தொடர்பிலும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
செந்தாரகை விளையாட்டுக்கழகத் தலைவர் ஜெகதீஸ்வரன் நங்களேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜெயபுரம் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி К.М.А. குமரசிங்க, வேரவில் வைத்தியசாலை வைத்திய அதிகாரி வைத்தியர் E.M.A.U. எக்கநாயக, பிரதான அனுசரணையாளர் ஜெகதீஸ்வரன் பராசக்தி, கிளி/கிராஞ்சி அ.த.கூ. பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் நடராசா ரவிசங்கர், பூநகரி பிரதேச சபை உறுப்பினர் வல்லிபுரம் அற்புதராசா, வலைப்பாடு பங்குத் தந்தை அருட்பணி குமாரசிங்கம் தயதீபன், கிராஞ்சி கிராம அலுவலர் A.B. நோயல், கிராஞ்சி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தாவீது நிர்மல றொபின்சன், மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் அன்ரனி டெவின்சன், பூநகரி உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் இராசரத்தினம் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















