பெண்களை ஆபாசமாக பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்கு தமிழக பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக தனது கண்டனத்தை தெரிவிப்பதாக முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிக கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாக பேசி புளகாங்கிதம் அடைந்துள்ளார். தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாச நதியை, வன்ம நதியை, வக்கிர நதியை உருவாக்கியதே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதை தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
பெண்களைப் பற்றி ஆபாசமாக பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்த தீய சக்தி கூட்டத்திற்கு தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியை கொடுக்கத்தான் போகின்றனர். தொடர்ந்து பெண்களை ஆபாசமாக பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்கு தமிழக பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
















