யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் 8ம் திகதி அன்று (08.10.2026) வியாழக்கிழமை களப் பயணத்தை மேற்கொண்டு, மக்கள், பாடசாலை சமூகம் மற்றும் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேரில் கேட்டறிந்தார்.
அல்லைப்பிட்டி மற்றும் சுழிபுரம் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் முதலீட்டுச் செயற்பாடுகளை ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது, குறித்த முதலீடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் வழங்கப்பட வேண்டிய மேலதிக ஒத்துழைப்புகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இம்முதலீடுகள் வளர்ச்சியடைவதன் மூலம் அந்தப் பகுதிகளில் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைவதுடன், உள்ளூர் மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.
அல்லைப்பிட்டியில் அமைக்கப்பட்டு வரும் அல்லை விலாஸ் முதலீட்டுத் திட்டத்தையும் ஆளுநர் பார்வையிட்டார். இத்திட்டத்தை முன்னெடுப்பதில் ஏற்பட்டிருந்த சில தாமதங்கள் முன்னதாக ஆளுநரின் தலையீட்டின் மூலம் தீர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அவற்றின் மூலம் குறித்த பிரதேசத்துக்கும் வடக்கு மாகாணத்துக்கும் கிடைக்கக்கூடிய பயன்கள் தொடர்பில் முதலீட்டாளர் சண்முகநாதன் சுகந்தனால் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் கல்லுண்டாய் மக்கள் குடியிருப்புப் பகுதிக்குச் சென்றார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் விசேட பணிப்பின் பேரில் ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதியில், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையால் தாழ்நிலப் பகுதிகளுக்கு மண் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதை ஆளுநர் நேரில் பார்வையிட்டார்.
இதன்போது அங்கு வசிக்கும் மக்கள், தாங்கள் 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப்பகுதியில் குடியமர்த்தப்பட்டிருந்தபோதிலும், அதன் பின்னர் நீண்டகாலமாக மண் நிரவுதல் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்தனர். தற்போது அவை முன்னெடுக்கப்படுவதற்கு நன்றியும் தெரிவித்த அவர்கள், வீடுகளில் காணப்படும் சில திருத்தப் பணிகளையும் மேற்கொடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தனர். மக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்த ஆளுநர், நிலவரங்கள் தொடர்பில் உரிய முறையில் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரி மற்றும் அராலி முருகமூர்த்தி வித்தியாலயம் ஆகியவற்றுக்குச் சென்ற ஆளுநர், அங்குள்ள கட்டடத் தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாடசாலைகளின் ஏனைய தேவைகள் தொடர்பில் அதிபர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரிடம் நேரில் கேட்டறிந்தார். பாடசாலைகளின் அத்தியாவசிய தேவைகளை அடையாளம் கண்டு அவற்றை முன்னுரிமை அடிப்படையில் கையாள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
யாழ்ப்பாணம் – பொன்னாலை – பருத்தித்துறை வீதியில் சுழிபுரத்தில் அமைந்துள்ள முதலீட்டுச் செயற்றிட்டங்களையும் ஆளுநர் பார்வையிட்டார். யாழ்ப்பாணத்தில் உற்பத்தியாகும் பழங்களிலிருந்து பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களை எதிர்காலத்தில் தயாரிக்கும் திட்டம் தொடர்பில் முதலீட்டாளரால் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், அங்கு தற்போது இயங்கி வரும் விற்பனை நிலையம், சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்காக தயாரிக்கப்படும் பனை சார்ந்த உற்பத்திப் பொருட்கள் மற்றும் எதிர்காலத்தில் நீண்டகால நோக்கில் அமைக்கப்படவுள்ள நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களையும் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.
வடக்கு மாகாணத்தின் சுற்றுலா வளங்களையும், உள்ளூர் உற்பத்திகளையும் ஒருங்கிணைத்து முதலீட்டு வாய்ப்புகளாக மாற்றுவதன் மூலம் பிரதேச மட்ட பொருளாதாரச் செயற்பாடுகளையும் வேலைவாய்ப்புகளையும் விரிவுபடுத்த முடியும் எனவும், தற்போது முதலீட்டுக்கான சூழல் காணப்படுவதாகவும் Palmyrah world (pvt) Ltd நிறுவுனரும் முதலீட்டாளருமான சண்முகநாதன் சுகந்தன் சுட்டிக்காட்டினார்.
இந்தக் களப் பயணத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கலந்துகொண்டார்.















