ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட பிக்குகளின் வரம்பு மீறும் போக்கு!
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைப் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கோரியும், பௌத்த தேரர்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு வலியுறுத்தியும் பௌத்த தேரர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைபேரணி, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தை 14ம் திகதி மாலை வந்தடைந்தது.
இந்த நடைபேரணி காரணமாக காலிமுகத்திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், பாதுகாப்புக்காக அதிகளவிலான பொலிஸாரும் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஜனாதிபதியையும் ஜனாதிபதி செயலாளரையும் நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காகத் தேரர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அங்கு வந்த ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, தேரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அப்போது, அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்கு அரசுக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படும் என ஜனாதிபதி செயலாளர் தெரிவித்தார். இருப்பினும், ஒரு முடிவை எடுப்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடு குறித்து உடன்பாடு எட்டப்படாமல் இந்த பேச்சு நிறைவடைந்ததால், பிக்குகள் தமது போராட்டத்தை கொட்டும் மழைக்கு மத்தியில் தொடர்ந்து முன்னெடுத்தனர்.
இதனிடையே, காலி வீதியில் போராட்டக்காரர்கள் தற்காலிகக் கூடாரமொன்றை அமைத்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியே பதற்றம் நிலவியது. அக்கூடாரத்தை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் அறிவுறுத்திய போதிலும் பிக்குகள் அதற்கு மறுப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து, பொலிஸார் பலவந்தமாகக் கூடாரத்தை அகற்றியமையுடன், அங்கிருந்த பிக்கு ஒருவரையும் கைது செய்தனர். இதனால் கோபமடைந்த பிக்குகள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அங்கு பெரும் முறுகல் நிலை ஏற்பட்டது.
இந்தப் போராட்டம் காரணமாகக் கொழும்பு – காலி முகத்திடல் வீதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுத் தடைப்பட்டது. ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகக் கலகத் தடுப்புப் பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினாலோ அல்லது சட்டத்தை மீறினாலோ கைது செய்யப்படுவீர்கள் எனப் போராட்டத்தில் ஈடுபடும் பிக்குகளுக்குப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளும், அவர்களின் ஆதரவாளர்களும் பொலிஸாரின் வேண்டுகோளை ஏற்று காலி வீதியின் எதிர்ப்பக்க நடைபாதைக்குத் தமது போராட்டத்தை மாற்றினர்.
இதனையடுத்து, காலி வீதியின் போக்குவரத்து மீண்டும் முழுமையாகச் சுமுக நிலைக்குத் திரும்பியது. குறைந்த எண்ணிக்கையிலான போராட்டக்காரர்களுடன் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் போராட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர, சஞ்சீவ எதிரிமான்ன, இந்திக அனுருத்த மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
















