ரன்பீர் கபூர், யாஷ் நடித்த ‘ராமாயணா’ படத்தின் புதிய முன்னோட்டம் வெளியாகியுள்ளது. வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராமாயணா’. இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்றும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றதைத் தொடர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ராமாயணா படத்தின் புதிய முன்னோட்டம் நேற்று வெளியாகி உள்ளது. இந்த புதிய முன்னோட்டத்தில் ராமர் மற்றும் ராவணன் இடையிலான மோதல் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ராமராக வரும் ரன்பீர் கபூர், தீமையை அழித்து ராவணனை வீழ்த்துவதாகச் சபதம் எடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மறுபுறம், மூன்று உலகங்களையும் ஆளும் வலிமை கொண்டவனாக ராவணன் சித்தரிக்கப்பட்டுள்ளார். தேவர்களின் படையுடன் ராவணன் மோதும் காட்சிகளும், சீதையைக் கடத்தும் சம்பவத்தின்போது ஜடாயு ராவணனை எதிர்த்துப் போராடும் காட்சிகளும் முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த முன்னோட்டம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
















