24 நாட்டு விமானிகள், பணிப்பெண்கள் இஸ்ரேல் வான் எல்லைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வான்வெளியில் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் அரங்கேறும் கடத்தல் சம்பவங்கள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில், கடந்த மாதம் துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற விமானத்தை இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது மோதச் செய்ய ஓமன் நாட்டு துணை விமானி முயன்றார். அப்போது இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி அந்த சதியை முறியடித்தார். இந்த வான்வழிப் போராட்டத்தில் படுகாயமடைந்த இந்திய விமானி ‘ஹீரோ’ என உலக தலைவர்களால் பாராட்டப்பட்டார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், இஸ்ரேல் அரசு தற்போது புதிய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, இஸ்ரேலுடன் தூதரக உறவு இல்லாத பாகிஸ்தான், ஈரான், ஓமன், சவுதி அரேபியா உள்ளிட்ட 24 நாடுகளின் விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் இஸ்ரேல் வான் எல்லைக்குள் நுழைய அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச விமான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.















