72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவா உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இசையமைப்பாளர் தேவாவிற்கு குடும்பத்தினர், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர். தமிழ் சினிமாவில் தேனிசைத் தென்றல் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர், இசையமைப்பாளர் தேவா. சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர் தேவா. கடந்த 1986-ம் ஆண்டு வெளிவந்த ‘மாட்டுக்கார மன்னாரு’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினி வில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முக்கிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ள தேவா, முன்னணி இசையமைப்பாளராக கொடிகட்டிப் பறந்தார். சென்னை தியாகராயநகரில் குடும்பத்துடன் வசித்து வந்த தேவா, சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று காலை அவரது உடல்நிலை மோசமடைய, அவர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.அவருக்கு வயது 75. தேவா உயிரிழந்த தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்களி டையே சோகத்தை ஏற்படுத்தியது. இசையமைப்பாளர் தேவாவின் உடல் பின்னர் அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு முதல் அமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார். இசையமைப்பாளர் தேவாவின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தேவாவின் உடல் அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூர் எடுத்து செல்லப்பட்டது. அங்கு உள்ளூர் மக்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, தேவாவுக்கு சொந்தமான தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேவா உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்று உடல்அடக்கம் செய்யப்பட்டது. தேவா உடலுக்கு அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் கண்ணீர் மல்க பிரியா விடை அளித்தனர்.
















