ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘ஆதி ருத்ரா’. தெய்வீகமும், மர்மமும் கலந்த கதைக்களத்தில் வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஆன்மிகம், நம்பிக்கை மற்றும் தெய்வீக மர்மங்களை மையமாகக் கொண்டு ‘ஆதி ருத்ரா’ என்ற புதிய பான் இந்திய திரைப்படம் பிரமாண்டமாக உருவாகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆதி சாய்குமார் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். திரிஷூல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜி.பிரசாந்த் இப்படத்தைத் தயாரிக்கிறார். நவரசன் எழுதி இயக்குகிறார். 1960 முதல் 1990 வரையிலான காலகட்டத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. தெய்வீக மர்மங்கள், ஆன்மிகம் மற்றும் மக்களின் நம்பிக்கைகள் சார்ந்த அம்சங்களை மையமாகக் கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. மர்மங்கள் நிறைந்த கதைக்களத்தில் உருவாகும் இப்படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஆதி ருத்ரா’ திரைப்படத்திற்கு பி.அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். ஏ.ஜே.ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது
















