இந்தியா-நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 27-ந்தேதி அன்று கையெழுத்தான இந்த ஒப்பந்தம் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா கையெழுத்திட்டுள்ள 7-வது வர்த்தக ஒப்பந்தமாகும். இதன் மூலம் இந்தியா தனது 17-வது செயல்பாட்டு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. கடந்த 2025-26 நிதியாண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 11 சதவீதமாக சரிந்து ரூ.11 ஆயிரம் கோடியாக (1.15 பில்லியன் அமெரிக்க டாலர்) குறைந்திருந்தது. இந்தச் சரிவை மாற்றி, 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை ரூ.35 ஆயிரம் கோடி (7 பில்லியன் நியூசிலாந்து டாலர்) இரட்டிப்பாக்க இந்த ஒப்பந்தம் இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி (20 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்வதாகவும் இந்த ஒப்பந்தம் மூலம் நியூசிலாந்து உறுதியளித்துள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தகம் அமலுக்கு வந்த முதல் நாளிலிருந்தே நியூசிலாந்து சந்தையில் முழுமையான வரிவிலக்கு கிடைக்கிறது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 10 சதவீதம் வரை இருந்த வரிகள் இனி கிடையாது. ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், மருந்துகள் மற்றும் என்ஜினீயரிங் பொருட்கள் தயாரிக்கும் இந்தியத் தொழில்கள் இதனால் உடனடியாகப் பயனடையும். இந்தியாவின் மிக உணர்திறன் வாய்ந்த உள்நாட்டு பால் பண்ணை மற்றும் விவசாயத் துறைகளை நியூசிலாந்தின் இறக்குமதியில் இருந்து இந்தியா வெற்றிகரமாகப் பாதுகாத்துள்ளது. இந்தியாவுக்கு இறக்குமதியாகும் நியூசிலாந்து பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றுக்கு முதல் நாளிலேயே வரி நீக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக 82 சதவீதம் ஆகவும், முழுமையாகச் செயல்படும் போது 95 சதவீதம் ஆகவும் உயரும். உயர்தர நியூசிலாந்து பொருட்களான கிவி பழம், ஆப்பிள், செம்மறி ஆட்டு இறைச்சி, கம்பளி, தேன் மற்றும் மரப் பொருட்கள் ஆகியவை இந்திய நுகர்வோருக்கு மலிவான விலையில் கிடைக்கும். இந்த வர்த்தகம் ஒப்பந்தம் மூலமாக தகுதிவாய்ந்த இந்தியத் தொழில் வல்லுநர்களுக்கு 5 ஆயிரம் தற்காலிக வேலைவாய்ப்பு விசாக்களை நியூசிலாந்து வழங்கவுள்ளது. மேலும் இந்திய மாணவர்களுக்கான விசா வரம்புகள் நீக்கப்பட்டுள்ளன. அவர்கள் படிக்கும் போது வாரத்திற்கு 20 மணிநேரம் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். படிப்பை முடித்த பிறகு. அறிவியல் பட்டதாரிகளுக்கு 3 ஆண்டுகள் வரையும், முனைவர்பட்டம் பெற்றவர்களுக்கு 4 ஆண்டுகள் வரையும் தங்கி வேலை செய்யும் உரிமை நீட்டிக்கப்பட்டுள்ளது.
















