உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவது குறித்து வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதேசமயம், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.இதன் காரணமாக உள்ளாட்சி நிர்வாகங்கள் தனி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவருகின்றன. கடந்த 2025ஆம் ஆண்டு முதலேயே ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு, தனி அலுவலர்களின் பதவிக்காலமும் நீட்டிக்கப்பட்டுவருகிறது. கடந்த 21 மாதங்களாக இப்படி நீட்டிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு, தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், ஏற்கனவே தனி அலுவலர்கள் நிர்வாகத்தில் இருந்த 28 மாவட்டங்களுடன், தாமதமாகத் தேர்தல் நடத்தப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலமும் அக்டோபர் 19ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து புதிதாக அந்த 9 மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் 37 மாவட்டங்களிலும் தனி அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவது தொடர்பாக வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: பொதுவாக, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று, வார்டு மறுவரையறை, மறுசீரமைப்பு மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முழுமையாக வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பணிகளை முடிப்பதற்காகத்தான் தற்போது தேர்தல் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்” என்றார்.
















