நடிகர் பரத் நடிக்கும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் எம். குரு இயக்கத்தில் நடிகர் பரத் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். நேற்று இப்படத்திற்காக நடைபெற்ற முறைப்படியான பூஜை விழாவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படத்தின் பூஜையில் இயக்குனர் விருமாண்டி முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். பரத்துடன் ஜோடியாக ஷ்வஸ்தா ராஜ், மீனாட்சி தினேஷ் மற்றும் ரக்ஷனா இந்துசூடன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முனிஷ்காந்த், கட்டெறும்பு ஸ்டாலின், சுஜிதா உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். மேலும் சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர் 2’ படத்தின் ‘அல்லபொலேலோ’ பாடலில் தோன்றி தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ராஜேஷ் மாதவன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைவது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. எம். குரு எழுதி இயக்கும் இந்தப் படத்தில், நகைச்சுவை மற்றும் குடும்ப சென்டிமென்ட் சம அளவில் இடம்பெறும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஆலப்புழாவில் மொத்தம் 45 நாட்கள் நடைபெற உள்ளது. ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ், டி குரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். சதீஷ் குமார், படத்தொகுப்பாளர் அருள் இ. சித்தார்த், கலை இயக்குநர் டான் பாலா மற்றும் சண்டை இயக்குநர் தினேஷ் காசி ஆகியோர் அடங்குவர்.
















