இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ‘பரிபாடி’ படத்தின் மூலம் முதன்முறையாக மலையாளத் சினிமாவில் அறிமுகமாகிறார். மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜோஜூ ஜார்ஜ், இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். குறிப்பாக, ‘பனி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மலையாளப் படங்கள் மட்டுமின்றி, தமிழிலும் ‘ஜெகமே தந்திரம்’, ‘ரெட்ரோ’, ‘தக்லைப்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானவர். ‘பனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜோஜூ ஜார்ஜ் ‘பரிபாடி’ என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தை அவரே எழுதி இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். காவ்யா பிலிம் கம்பெனி சார்பில் வேணு குன்னப்பள்ளி இப்படத்தைத் தயாரிக்கிறார். மேலும், இப்படத்தின் மூலம் சுமார் 100 புதுமுகங்களைத் திரையுலகிற்கு அறிமுகம் செய்ய ஜோஜூ ஜார்ஜ் திட்டமிட்டுள்ளார். இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘பரிபாடி’ படத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் வருகை அமைந்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அவர் முதன்முறையாக மலையாளத் திரையுலகில் அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவில் பல வெற்றிப் பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியுள்ள யுவனின் இசை, மலையாள ரசிகர்களிடையே எத்தகைய வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்திற்கு ஒளிப்பதிவை ராஜீவ் ரவி மேற்கொள்கிறார். திருச்சூரை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. ‘பரிபாடி’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோஜூ ஜார்ஜின் புதிய முயற்சி, யுவன்சங்கர் ராஜாவின் மலையாள அறிமுகம், 100 புதுமுகங்களின் வருகை எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள ‘பரிபாடி’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
















