‘ரொறன்ரோ தமிழ்ப் புத்தக அரங்கம்’ ஆரம்ப வைபவத்தில் சிறப்புரையாற்றிய கனடிய தமிழர் பேரவையின் இயக்குனர் சபை உறுப்பினர் சுகிர்தன் கணபதி தெரிவிப்பு!

“எமது தமிழினம் சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக இந்த மண்ணில் வாழ்ந்து வரும் பாக்கியத்தை பெற்றுள்ளது. அதே வேளையில் கனடாவில் எமது தமிழ், பேச்சு மொழியாக இருப்பதை உணர்ந்து நாம் திருப்தியடைந்தோம். எனினும் எமது மொழியை பேச்சு மொழியாக மாத்திரம் கொள்ளாது எழுத்து மற்றும் வாசிப்பு மொழியாகவும் திகழ்வதை உறுதி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இங்கு சில தமிழ் அமைப்புக்களோடு நாம் நடத்திய கலந்துரையாடல்களின் போது நாம் உணர்ந்தோம் உரையாடினோம். அந்த கலந்துரையாடல்களின் தீர்க்கமான முடிவின் அடிப்படையிலேயே நாம் நடத்துகின்ற ‘ரொறன்ரோ தமிழ்ப் புத்தக அரங்கம்’ இன்று இங்கு ஆரம்பமாகின்றது. எனவே எமது மொழியையும் வாசிப்பையும் கொண்டாடும் ஒரு களமாகக் கொண்டாடுவோம்.”
இவ்வாறு, ‘ரொறன்ரோ தமிழ்ப் புத்தக அரங்கம்’ ஆரம்ப வைபவத்தில் சிறப்புரையாற்றிய கனடிய தமிழர் பேரவையின் இயக்குனர் சபை உறுப்பினர் சுகிர்தன் கணபதி தெரிவித்தார்.
கடந்த 24ம் திகதி சனிக்கிழமையன்று மதியம் ஸ்காபுறோவில் அமைந்துள்ள மல்வேர்ன் சமூக மையத்தின் அரங்கில் ஆரம்பமான ‘ரொறன்ரோ தமிழ்ப் புத்தக அரங்கம்’ முதல்நாள் வைபவத்தை கனடிய தமிழர் பேரவையின் முன்னாள் தலைவர் சிவன் இளங்கோ அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய சுகிர்தன் கணபதி அவர்கள் தனது உரையில் “நாம் எமது மொழியின் வளர்ச்சியையும் அதன் இருப்பையும் உறுதி செய்யும் வகையில் எமது இனத்தின் மத்தியில் ஒற்றுமையை உறுதி செய்ய வேண்டும். அதற்கு எமது மொழியைப் பேசுகின்ற அமைப்புக்களோடும் தனி நபர்களோடும் தோழமையை வளர்த்து கொள்ள வேண்டும். அந்த அடிப்படையிலேயே கனடாவில் இயங்கிவரும் ‘ஐக்கிய இலங்கை முஸ்லிம் பேரவை’ யோடு இணைந்து இவ்வருடத்தின் ரொறன்ரோ புத்தக அரங்கத்தை இரண்டு நாட்கள் நடத்துகின்றோம்” என்றார்.
அங்கு உரையாற்றிய ஐக்கிய இலங்கை முஸ்லிம் பேரவை’ அமைப்பின் தலைவர் அயுப் அஸ்மின் அவர்கள் தனது உரையில் ‘ நாம் எமது மொழியின் பெருமையையும் இனிமையையும் பேசும் போது அனுபவிக்கின்றோம். எனவே எமது மொழியின் செழுமையைப் பாதுகாக்க புத்தகங்களை வாசிப்பதையும் எழுத்தாளர்களையும் புத்தக வௌியீட்டாளர்களை ஒரே இடத்தில் சந்திக்கச் செய்ய வேண்டும். அவர்களை கொண்டாடியும் பாராட்டியும் மகிழ்விக்க வேண்டும். இதனால் நாம் மேலும் ஒரு பண்பட்ட சமூகமாக எழுச்சியுற வாய்ப்புக்கள் பெறுகும்’ என்றார்.
தொடர்ந்து கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் மற்றும் எழுத்தாளர் தாம் சிவதாசன், சமீம் முகமட் உட்பட பலர் உரையாற்றினார்கள்.
தொடர்ந்து இரண்டு நாட்களும் நூல் அறிமுகம் மற்றும் மற்றும் விமர்சன அரங்கு என பல பயனுள்ள் சந்திப்புக்கள் இடம்பெற்றன.
பிரபல எழுத்தாளர் கே. டானியல் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூல் வெளியீடு மற்றும் ஆய்வு உரைகள் ஆகியன இடம்பெற்றன. அத்துடன் இங்கிலாந்தில் வாழும் எழுத்தாளர் சுப்பிரமணியனம் லோகநாதன் அவர்கள் எழுதிய ‘முதுமை வாழ்வின் முழுமை’ என்னும் நூலின் அறிமுக விழா எழுத்தாளரும் திறனாய்வாளருமான திரு சண்முகலிங்கம் தலைமை தாங்கினார். நூலின் பிரதிகளை பல வர்த்தக நண்பர்களும் ஆர்வலர்களும் பணம் கொடுத்துப் பெற்றுச் சென்றனர். இவ்வாறான மேலும் பல நூல்களும் அங்கு அறிமுகம் செய்யப்பெற்றும் விற்பனை செய்யப்பெற்றும் வாசகர்களைச் சென்றடைய இவ்வாண்டின் ‘ரொறன்ரோ புத்தக அரங்கம்’ பக்கபலமாக விளங்கிய என்றால் அது மிகையாகாது
சத்தியன்





























