‘கடவுள் தந்த பரிசு’ படத்தின் 6 பாடல்களையும் ஒரே நாளில் கம்போஸ் செய்து முடித்த இளையராஜாவுக்கு நேரில் சென்று ராமராஜன் நன்றி தெரிவித்தார். தமிழ் சினிமாவில் சில கூட்டணிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி மரியாதை இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்தக் கூட்டணி உருவாக்கிய படங்களும், பாடல்களும் ரசிகர்களின் நினைவுகளில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும். அந்த வரிசையில் நடிகர் ராமராஜன் – இசையமைப்பாளர் இளையராஜா கூட்டணிக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. கிராமத்து பின்னணியில் உருவான கதைகள், குடும்ப உணர்வுகள், காதல், நகைச்சுவை என ராமராஜன் நடித்த பல படங்களுக்கு இளையராஜா வழங்கிய இசை, அந்தப் படங்களின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது. ‘எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன்’ என தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்து பல உச்ச நட்சத்திர நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் நடிகர் ராமராஜன். இறுதியாக 2024-ல் ‘சாமானியன்’ என்கிற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது, நடிகர் ராமராஜன் ‘கடவுள் தந்த பரிசு’ என்கிற புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். இதனை அறிமுக இயக்குநர் காசிமாயன் என்பவர் இயக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். இது ராமராஜன் – இளையராஜா கூட்டணியின் 25-வது திரைப்படமாகும். “எனது ‘கடவுள் தந்த பரிசு’ படத்திற்கு ஒரே நாளில் ஆறு பாடல்களை கம்போஸ் செய்தும் அடுத்த சில நாட்களிலேயே ரெக்கார்டிங்கையும் முடித்து சிறந்த பாடல்களை தந்திருக்கும் என் அண்ணன் ‘இசைக்கடவுளுக்கு’ என் நெஞ்சம் மகிழ்ந்த நன்றி! அண்ணனுக்கு என்றென்றும் நன்றி கடன்பட்டவன் நான்…” எனத் தெரிவித்துள்ளார்.



















