உக்ரைனுக்கு ரூ.19 ஆயிரத்து 900 கோடி மதிப்பில் 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் பகுதிகளைக் குறிவைத்து ரஷியா நாளுக்கு நாள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. சமீபத்தில் டினிப்ரோ ரெயில் நிலைய டிரோன் தாக்குதலில் 14 பேர் பலியாகினர். தலைநகர் கீவ் மீது ஏவுகணைகள் மழை போல் பொழிவதால், ரஷியாவின் அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீழ்த்த சக்திவாய்ந்த ‘பேட்ரியாட்’ ஏவுகணைகளுக்காக அமெரிக்காவின் கையெழுத்துக்கு ஒரு மாதமாக காத்திருப்பதாக ஜெலென்ஸ்கி ஆதங்கம் தெரிவித்தார். அமெரிக்காவில் டிரம்ப் மீண்டும் அதிபராக பொறுப்பேற்ற பின், உக்ரைனுக்கான ஆயுத உதவிகளில் தொய்வு ஏற்பட்டது. ரஷியாவுடன் டிரம்ப் அரசு மேற்கொண்ட டீசல் ஒப்பந்தம் மற்றும் ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்களுக்கு டிரம்ப் எதிர்ப்பு காட்டியதால் இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. தற்போது இந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, உக்ரைன் நாட்டின் தற்காப்புக்காக சுமார் ரூ.19 ஆயிரத்து 900 கோடி (2.1 பில்லியன்) மதிப்பிலான 500 ‘பேட்ரியாட் பிஏசி-3’ அதிநவீன ஏவுகணைகளை உக்ரைனுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.



















