பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 26 கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கும் அரசின் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசு, பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்செயல்களை தடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆரம்பத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. தற்போது குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்செயல்கள் தடுப்பது குறித்து தீவிர ஆய்வு செய்து, இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க தற்போது 22 நீதிமன்றங்கள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 12 சிறப்பு நீதிமன்றங்கள், 14 கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் என புதிதாக 26 நீதிமன்றங்கள் அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. இதன் மூலம் நீதிமன்றங்களின் விசாரணையில் இருந்து வரும் 18,733 வழக்குகள் மீது விரைந்து நீதி வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய நான்கு மையங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதும் நல்ல நடவடிக்கையாகும். குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுப்பதில் காவல்துறையின் நடவடிக்கை மிக முக்கியமானது என்பதை கருத்தில் கொண்டு, வழக்குகளை பதிவு செய்வதிலும், விசாரிப்பதிலும், குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் சாட்சியங்கள் மற்றும் ஆவண காட்சியங்களை கண்டறிந்து உறுதி செய்வதிலும் காவல்துறையின் நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. அது தொடர்பாகவும் முதல்-அமைச்சர், தனி ஆய்வு செய்து சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



















