தேர்தலில் நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போமென டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் இடைக்காலத் தேர்தல் எனப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மாறாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன் முடிவுகள் அதிபரின் எஞ்சிய ஆட்சிக்காலத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இந்த தேர்தல் உலகம் முழுவதும் உற்று நோக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றினால் நாடாளுமன்றத்தில் அதிகார சமநிலை மாறும். இந்திய நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட்சபையின் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி இன்று அதிகாலை முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததுமே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் ஆரம்ப கட்ட தேர்தல் முடிவுகளின்படி ஜனநாயக கட்சி முன்னிலை பெற்றது. டிரம்பின் குடியரசுக்கட்சி பின்னடைவை சந்தித்து வந்தது. இந்த நிலையில், அமெரிக்க இடைக்கால தேர்தலில் செனட் சபையை ஜனநாயக கட்சி கைப்பற்றியுள்ளது. டிரம்பின் குடியரசு கட்சி 40 இடங்களை மட்டுமே பெற்று பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், ஜனநாயக கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 50 இடங்களை கடந்து 52 இடங்களை பெற்று செனட் சபையை கைப்பற்றியுள்ளது.
இதைபோல மக்கள் பிரதிநிதித்துவ சபையில் 77 இடங்களில் மட்டுமே குடியரசு கட்சி முன்னிலை வகிக்கிறது . பைடன், கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி 132 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அமெரிக்காவின் ஓஹியோ மாநில ஆளுநர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி தோல்வி அடைந்துள்ளார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஏமி ஆக்டன் வெற்றி பெற்று ஆளுநராகத் தேர்வாகியுள்ளார். இதன் மூலம் கடந்த 16 ஆண்டுகளாக குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த ஆளுநர் பதவியை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. 2006-ம் ஆண்டுக்குப் பிறகு அங்கு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராகத் தேர்வாவது இதுவே முதல்முறை. அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை இழக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; நாங்கள் தேர்தலில் வெற்றி பெறவில்லை. ஒருவேளை நான் போட்டியிட்டிருந்தால் நாங்கள் இமாலய வெற்றி பெற்றிருப்போம்’ என்று கூறியுள்ளார்.



















