ஆந்திரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 13 மாநகராட்சி மேயர் பதவிகளில் 12 இடங்கள், 87 நகராட்சி தலைவர் பதவிகளில் 81 இடங்கள் மற்றும் 3942 வார்டு பதவிகளில் 3223 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி, ஜன சேனா கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியோர் உள்ளடங்கிய கூட்டணிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
பிரதமரின் சீரிய வழிகாட்டுதலின் கீழ், தங்களது அயராத உழைப்பாலும், இடைவிடாத மக்கள் சேவையாலும் ஆந்திரப் பிரதேசத்தில் அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ள ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ஆந்திர துணை முதல்-அமைச்சர் பவன் கல்யாண் மற்றும் ஆந்திர பாஜகவின் மாநிலத் தலைவர் பி. வி. என். மாதவ் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘எங்கள் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டும் தான் காரணம்’ என இதுநாள் வரை மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் வாக்குச்சீட்டு முறையில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல்களில் கூட கடும் தோல்விகளைத் தான் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறது. பொய்களாலும் புரட்டுகளாலும் ஒருபோதும் மக்கள் மனதை வெல்ல முடியாது என்பதை ராகுல் காந்தி என்றைக்கு உணரப் போகிறாரோ தெரியவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















