எதிர்க்கட்சிகள் சட்டம் இயற்றினால், வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்து செய்வேன்யென அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். உலகின் மிகவும் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்கா, அதிபர் பதவிக்காக தனியாகவும், நாடாளுமன்றத்துக்காக தனியாகவும் தேர்தல் நடத்துகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தலும், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற தேர்தலும் நடக்கிறது. இது இடைக்காலத் தேர்தல் என அழைக்கப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்றம் பிரதிநிதிகள் சபை (கீழ் சபை), செனட் சபை (மேல் சபை) என இரு அவைகளை கொண்டிருக்கிறது. இதில் பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்களும், செனட்டில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் இருந்தும் தலா 2 பேர் வீதம் 100 பேரும் உள்ளனர். பிரதிநிதிகள் சபை உறுப்பினரின் பதவிக்காலம் 2 ஆண்டுகளும், செனட்டர் பதவிக்காலம் 6 ஆண்டுகளும் ஆகும். எனவே 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இடைக்காலத் தேர்தலில், பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையில் 3-ல் ஒரு பங்கு இடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. அமெரிக்காவின் தற்போதைய அதிபரான டிரம்ப், கடந்த 2024-ம் ஆண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜனவரியில் பதவியேற்றார். அவர் சுமார் 2 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில், அமெரிக்க இடைக்கால தேர்தல் நேற்று நடந்தது. இதில் பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையில் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. மேலும் 36 மாகாண ஆளுனர் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் என மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை அமெரிக்கா நடத்தியது. இந்த தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி இடையே பலத்த போட்டி காணப்பட்டது. மிகவும் பரபரப்பாக நடந்த இடைக்கால தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் வாக்குச்சீட்டு மூலம் ஓட்டு போட்டனர். வாக்குப்பதிவு நிறைவடைந்த உடனே வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. இதில் இந்திய நேரப்படி நேற்று காலை முதலே முடிவுகள் வெளியாக தொடங்கின. இதில் தொடக்கம் முதலே எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் வெற்றிமுகம் காட்டினர். நேரம் செல்ல செல்ல அந்த கட்சியின் கையே முற்றிலும் ஓங்கியது. இதைப்போல ஆளுனர் தேர்தலிலும் ஜனநாயக கட்சியினரின் கையே ஓங்கியது. தற்போதைய நிலையில் மொத்தமுள்ள 50 ஆளுனர்களில் 28 பேர் ஜனநாயக கட்சியையும், 20 பேர் குடியரசு கட்சியையும் சேர்ந்தவர்களாக உள்ளனர். 2 இடங்களுக்கு முடிவு வெளியாவதில் தாமதம் நிலவியது. அமெரிக்காவின் இந்த இடைக்கால தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்று இருந்தனர். இதைப்போல முதல் கருப்பின பெண் கவர்னர், முதல் முஸ்லிம் செனட்டர் என சில முதல் நிகழ்வுகளும் அரங்கேறி இருந்தன. இடைக்கால தேர்தலில் டிரம்பின் குடியரசுக்கட்சி படுதோல்வி அடைந்திருப்பது அவருக்கும். அவரது கட்சியினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்பதாக டிரம்ப் அறிவித்தார். வெற்றி பெற்ற ஜனநாயக கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்த அவர், நாட்டு நலனுக்காக இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதேநேரம் ஒத்துழைக்க மறுத்தால் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவேன் என மிரட்டலும் விடுத்திருந்தார். இதை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்த அவர், அதை குறிக்கும் வகையில் வீட்டோ என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட தொப்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எச்சரித்து இருந்தார்.



















