தேனியில் போதை கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமாரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் விஜய், அவரது குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிதியுதவி வழங்கப்படுமென அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் சமதர்மபுரம் பகுதியில் நேற்று போதையில் இளைஞர்கள் சிலர் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துள்ளனர். இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளான நிலையில், அவ்வழியாக வந்த சிறப்பு உதவி ஆய்வாளர்(எஸ்.எஸ்.ஐ.) செந்தில் குமார் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பட்டாசு வெடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் இதனை கேட்காமல் தொடர்ந்து அந்த கும்பல் பட்டாசு வெடித்துள்ளது. எச்சரிக்கையை மீறி இடையூறு செய்த இளைஞர்களை கைபேசியில் சிறப்பு உதவி ஆய்வாளர் காணொளி பதிவு செய்துள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த போதை இளைஞர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமாரைக் கடுமையாகத் தாக்கினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், வரும் வழியிலேயே செந்தில் குமார் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன் கவுதம் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறை, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமாரை தாக்கிய கும்பல் குறித்து விசாரித்து வருகிறார்கள். முதல் கட்டமாக 4 பேரைப் பிடித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் அதிகாரியே அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், போதை கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த உதவி உதவி ஆய்வாளர் செந்தில் குமாரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், செந்தில் குமாரின் குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.



















