தமிழ்த் தேசிய அரசியலில் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது.அந்த வெற்றிடத்தை உணர்ந்து தமிழ்த் தேசிய அரசியலை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவது என்று சொன்னால்,கம்பன் கழகம் தெரிவிக்கும் விமர்சனங்களைப் பரிசீலிக்க வேண்டும்.தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவை நீக்கி தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்ப வேண்டும்.பலமான அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைமை,ஜனவசியம் மிக்க ஒரு தலைமை மேலெழுமாக இருந்தால்,ஜெயராஜ் போன்றவர்கள் அப்படிப்பட்ட கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடிய சமூகப் பொருளாதார அரசியல் பண்பாட்டுச் சூழல் இருக்காது.
கம்பன் கழகத்தின் தலைவர் கம்பவாருதி ஜெயராஜ்,தான் கூறிய வார்த்தைகளை மீளப் பெறத் தயாரில்லை என்று தெரிகிறது. அந்த வார்த்தைகளை அவர் வாய் தடுமாறிக் கூறவில்லை என்பதும் தெரிகிறது.மிகவும் தெளிவாக நன்கு முடிவெடுத்து அவர் தனது கருத்தை கூறியிருக்கிறார் என்பது தெரிகிறது. அவ்வாறு தான் கூறிய கருத்துக்களால் யாருக்காவது மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் அதற்காகவும் அவர் வருத்தப்படுவதாகவும் தெரியவில்லை.தான் கூறியவற்றை அவர் நியாயப்படுத்துகிறார்.
அவர் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருப்பது இதுதான் முதல் தடவை அல்ல. இதற்கு முன்னரும் அவர் அவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்து வந்திருக்கிறார். 2009க்குப் பின் அவர் கம்பன் கழக மேடைகளில் மட்டுமல்ல,முகநூல் போன்ற சமூக ஊடகங்களிலும் கேள்வி-பதில் என்ற வடிவத்தில் தன் கருத்துக்களைத் தெரிவித்து வருறார். அண்மை மாதங்களாக அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் தனக்கும் இடையில் இருந்த உறவு தொடர்பாகவும் முரண்பாடுகள் தொடர்பாகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.இவ்வாறு தொடர்ச்சியாகத் தெரிவித்துவரும் கருத்துக்களில் ஆகப்பிந்தியவைதான் அண்மையில் அவர் நல்லூர் துர்கா மணிமண்டபத்தில் வைத்துத் தெரிவித்த கருத்துக்கள் ஆகும்.
அவருடைய கருத்துக்கள் மூன்று விதமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு பகுதியினர் அதை ஆதரிக்கிறார்கள். இன்னொரு பகுதியினர் அவர் கூறிய கருத்துக்கள் சரியானவை, ஆனால் அவற்றை அவர் தெரிவித்த விதம் பிழை என்று கூறுகிறார்கள்.மூன்றாவது தரப்பு,அவர் கூறிய கருத்துக்களுக்கு எதிராக செயற்கை நுண்ணறிவின் மூலம் அவருக்கு மின்கம்பத் தண்டனை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
அவருடைய கருத்துக்கள் இப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நன்கு தெரிந்து கொண்டுதான்,துர்கா மணிமண்டபத்தில் உரையாற்றினார். அதன்மூலம் தமிழ்ச் சமூகத்தில் கடந்த வாரமும் இந்த வாரமும் ஒரு சூடான பேசுபொருளாக மாறப் போவது குறித்து அவருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.ஒரு “ட்ரெண்ட்டை செட்” பண்ணுவது என்று தீர்மானித்து, தீர்மானகரமாக அவர் அந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார் என்பது அவர் அந்தக் கருத்தைத் தெரிவித்த போதும் அதன்பின்னர் அவர் கூறும் விளக்கங்களில் இருந்தும் விளங்கிக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
அவர் தெரிவித்த கருத்துக்களால் இப்பொழுது தமிழ்ச் சமூகத்தில் அதிகம் பேசப்படும் ஒரு நபராக அவர் மாறிவிட்டார்.”பொசிட்டிவ்” ஆகவோ “நெகட்டிவ்” ஆகவோ அவர் இப்பொழுது பிரபல்யம் ஆகிவிட்டார். பேசுபொருள் ஆகிவிட்டார். அவர் எதிர்பார்த்தது நடந்து விட்டதா?
அவருடைய பேச்சின் விளைவுகளைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது அது தமிழ்ச் சமூகத்தின் தற்போதைய நிலைமையின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றத்தைக் காட்டுகின்றதா ?
முதலாவதாக அவரை ஆதரிப்பவர்கள் அவர் கூறியவற்றை நியாயப்படுத்துகிறார்கள்.அவர் கூறுவதுபோல போராட்டத்தை வைத்து பிழைக்கும் அரசியல்வாதிகளை விமர்சிக்க வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள்.அதில் உண்மை உண்டு.கடந்த 17 ஆண்டுகால தமிழ்த் தேசிய அரசியலின் ஒருபகுதி இறந்த காலத்தை வைத்துப் பிழைப்பு நடத்துகிறது என்பது உண்மை. அதை விமர்சிக்கத்தான் வேண்டும்.
ஆனால் அந்த விமர்சனமானது தமிழ் மக்களின் அரசியலை அடுத்த கட்டக் கூர்ப்புக்கு,முன்னோக்கி உந்தித்தள்ளும் நோக்கத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும்.போராட்டத்தை வைத்துப் பிழைப்பவர்களை விமர்சிப்பது மட்டும் தமிழ் மக்களின் அரசியலை முன்னோக்கித் தள்ளாது. அதைவிட ஆழமான பொருளில் அந்தக் காயங்களையும் இழப்பையும் வைத்து அரசியல் செய்யக்கூடிய ஓர் அரசியல் சூழல் ஏன் நிலவுகிறது என்ற கேள்விக்கு விடை காண வேண்டும். தமிழ் மக்களின் காயங்கள் ஆறாமல் இருப்பதற்குப் பிரதான காரணம்,அவை அரசியல் காயங்கள்;கூட்டுக் காயங்கள்.அவற்றுக்குத் தீர்வு அரசியல் தீர்வுதான்.தமிழ் மக்களின் பிரச்சினைக்கு;இனப்பிரச்சினைக்கு அரசியல் நீதி கிடைக்க வேண்டும்.
ஆனால் அந்த இறந்த காலத்துக்குப் பொறுப்புக்கூற இதுவரையிலும் இருந்த எந்த ஒரு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பும் தயாராக இருக்கவில்லை. தமிழ் மக்களுக்கு அரசியல் நீதி கிடைக்கவில்லை.ஆயுதப் போராட்டம்தான் தீர்வுக்குத் தடையாக இருந்தது என்று கூறுபவர்கள்,கடந்த 17 ஆண்டுகளாக ஏன் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறார்கள்? ஆயுதப் போராட்டத்தை,குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை விமர்சித்தவர்கள் கடந்த 17 ஆண்டுகளாக தாயகத்தில் தங்களுடைய அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து ஒரு தீர்வைக் கண்டுபிடித்ருக்கலாம்தானே? ஏன் முடியவில்லை?
இந்தக் கேள்விக்கு விடைதேடிப் போனால் தெளிவாகத் தெரிவது என்னவென்றால்,இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கு கடந்த 17 ஆண்டுகளாக மூலகாரணமாக இருப்பது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்புதான்.ஐநாவின் தோல்வியுற்ற அணுகுமுறைகள் தான்.எனவே மூல காரணத்தை முதலில் குற்றஞ் சாட்ட வேண்டும்.
ஆனால் கம்பன் கழகம் அந்த மூலகாரணத்தை மேடைக்கு அழைத்து சிம்மாசனம் கொடுத்து பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றது. கடந்த 17 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் பிரதானிகளை அல்லது தமிழ் அமைச்சர்களை அழைத்து அவர்களுக்கு மேடை கொடுத்தது;பொன்னாடை போர்த்தியது.கடந்த ஆண்டு இப்போதுள்ள ஜனாதிபதியை அழைத்துக் கௌரவித்தது.இந்த விடயத்தில் சிங்களபௌத்த அரச அதிகாரத்தை கௌரவித்துக் கொண்டு தமிழ் மக்களின் கூட்டுக் காயங்களையும் கூட்டுத் துக்கத்தையும் கூட்டு மன வடுக்களையும் எப்படிப் பிரதிபலிப்பது?
இதில் இன்னும் ஒரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும்.தமிழ்த் தேசிய அரசியலில் கட்சிகளுக்குப் பொறுப்பாக இருக்கும் தரப்புகள் அல்லது கட்சிகளின் உடைவுக்குக் காரணமான அரசியல்வாதிகள் அல்லது கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கம்பன் கழகத்தின் மேடைகளில் காணப்படுகிறார்கள். அவர்களுக்கும் பொன்னாடை போர்க்கப்படுகிறது. தமிழ்த்தேசிய அரசியலின் இப்போதுள்ள சீரழிவுக்கு அவர்கள் எல்லாரும் கூட்டுப்பொறுப்பு. அவர்களை மேடைக்கு அழைத்து கௌரவித்துக்கொண்டு யார் மீது கம்பன் கழகம் விமர்சனங்களை முன்வைக்கின்றது?
ஜெயராஜ் கூறியவற்றை ஆதரிப்பவர்களைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அவர்களில் அநேகமானவர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதி அல்லது ஒரு கட்சிக்குள் குறிப்பிட்ட அணியை ஆதரிப்பவர்களாக ,மறைமுகமாக நியாயப்படுத்துகிறவர்களாகக் காணப்படுகிறார்கள்.அதன் மூலம் கம்பன் கழகம் கூறியவை ஒரு குறிப்பிட்ட தொகுதி அரசியல்வாதிகளுக்கு எதிரானவை என்பதனை அவர்களே நிருபிக்கின்றார்கள்.
இரண்டாவது விளைவாக,அவர் தெரிவித்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் அதேசமயம்,அவர் அவற்றைத் தெரிவித்த விதம் பிழையானது என்று கூறுபவர்கள்.ஆனால் ஜெயராஜ்,தான் பேசிய விடயமும் பேசிய விதமும் பயன்படுத்திய சொற்களும் சரி என்று திரும்பத்திரும்பக் கூறுகிறார். தான் மேடையில் கூறியவற்றை திரும்பப்பெறப் போவதில்லை என்று தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். அதாவது தான் என்ன பேசுகிறார் என்பதைத் தெரிந்து கொண்டு,அதன் விளைவுகளை நன்கு தெரிந்து கொண்டு,அவர் பேசியிருக்கிறார்.என்ன பேச வேண்டும்,எப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் தீர்மானகரமாக இருந்திருக்கிறார்.
அவருடைய பேச்சின் மூன்றாவது விளைவு,அவருக்கு எதிரான நாகரிகம் இல்லாத விமர்சனங்கள். தனிப்பட்ட தாக்குதல்கள். ஆளுமை படுகொலைகள். சிலர் செயற்கை நுண்ணறிவுமூலம் அவருக்கு மின்கம்பத் தண்டனையும் வழங்குகிறார்கள்.அவரை அவமதித்து “மீம்ஸ்”களை உருவாக்குகிறார்கள். ஜெயராஜ்ஜை விமர்சிப்பது என்பது,அவர் கூறிய கருத்துக்களின் பின்னால் இருக்கக்கூடிய சமூகப்பொருளாதார அரசியல் யதார்த்தத்தைப் புறக்கணிப்பதாக அமைய முடியாது.அவர் விமர்சிப்பதுபோல ஈழத் தமிழர்களின் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பானது சீரழிந்து போய் இருக்கிறது என்பது ஓர் அரசியல் யதார்த்தம்.அந்தச் சீரழிவுக்குப் பொறுப்பானவர்களை அவர் தன்னுடைய மேடைகளுக்கு அழைத்து கௌரவிக்கும்போது கம்பன் கழகத்தின் நடுநிலைமை கேள்விக்கு உள்ளாகி விடுகிறது.
அவர் அவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பதற்குக் காரணமே தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைத்துவ வெற்றிடந்தான்.தமிழ்த் தேசிய அரசியலில் காணப்படும் பிரதான கட்சியானது இப்பொழுதும் நீதிமன்றத்தில் நிற்கின்றது.தன் சொந்தப் பிரச்சினையில் இருந்து மீளமுடியாத ஒரு கட்சி இனப்பிரச்சினையை எப்படித் தீர்க்கும்? பதில் தலைவரும் பதில் செயலாளரும் அந்தக் கட்சியை நிர்வகிக்கிறார்கள்.கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்சி ஒன்றிணைந்த அமைப்பாக,உருகிப்பிணைந்த கட்டமைப்பாக இல்லை. பெரிய கட்சியின் சீரழிந்த உட்கட்சி நிலவரமானது,தமிழ்த் தேசிய அரசியலின் குறியீடாகக் காணப்படுகிறது.
இந்தத் தலைமைத்துவ வெற்றிடத்தில்தான் ஜெயராஜ் போன்றவர்கள் துணிந்து கருத்துக் கூறுகிறார்கள்.இந்தத் தலைமைத்துவ வெற்றிடத்தில்தான் தேசிய மக்கள் சக்திக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு நிகரான ஆசனங்கள் கிடைத்தன.ஒரு தென்னிலங்கை மையக் கட்சி;ஆளுங்கட்சி தமிழ் மக்களின் ஆணையும் தனக்கு உண்டு என்று கூறும் ஒரு நிலைமை வந்துவிட்டது.
தமிழ்த் தேசிய அரசியலில் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது.அந்த வெற்றிடத்தை உணர்ந்து தமிழ்த் தேசிய அரசியலை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவது என்று சொன்னால்,கம்பன் கழகம் தெரிவிக்கும் விமர்சனங்களைப் பரிசீலிக்க வேண்டும்.தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவை நீக்கி தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்ப வேண்டும்.பலமான அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைமை,ஜனவசியம் மிக்க ஒரு தலைமை மேலெழுமாக இருந்தால்,ஜெயராஜ் போன்றவர்கள் அப்படிப்பட்ட கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடிய சமூகப் பொருளாதார அரசியல் பண்பாட்டுச் சூழல் இருக்காது.


















