”2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட ஊழல் மோசடி தொடர்பான 70 பைல்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் பெரும்பாலானோர் இந்த பைல்களுக்குள் உள்ளடங்குகின்றார்கள் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போது பிரதான எதிர்க்கட்சியிலுள்ள பங்காளிகளிடையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஊழல் மோசடிகளை செய்து விட்டு கடந்த காலங்களில் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி இருந்த பலரும், இன்று அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசின் கீழ் “பழைய பைல்கள் தூசு தட்டப்படுவதைக்” கண்டு கலக்கமடைந்துள்ளனர். தமது ஆட்சியில் அதிகாரத்தின் நிழலில் சுகம் கண்டவர்கள், இன்று எதிர்கட்சியாகிய நிலையில் தங்கள் தலைமீது தொங்கும் கத்தியைக் கண்டு பதறிப்போயுள்ளனர் ”
—————-கே.பாலா

அதிகாரத்தின் பலத்தில் செய்யப்பட்ட ஊழல், மோசடிகள் ஒருநாள் அது சார்ந்தவர்களையே சுடும் என்பதற்கு இன்றைய இலங்கை அரசியல் களம் அசல் சாட்சியாகி வருகிறது. ஊழல் மோசடிகளை செய்து விட்டு கடந்த காலங்களில் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி இருந்த பலரும், இன்று அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசின் கீழ் “பழைய பைல்கள் தூசு தட்டப்படுவதைக்” கண்டு கலக்கமடைந்துள்ளனர். தமது ஆட்சியில் அதிகாரத்தின் நிழலில் சுகம் கண்டவர்கள், இன்று எதிர்கட்சியாகிய நிலையில் தங்கள் தலைமீது தொங்கும் கத்தியைக் கண்டு பதறிப்போயுள்ளனர்
அநுரகுமார அரசாங்கத்தில் கடந்த கால ஆட்சியாளர்களின் ஊழல், மோசடிப் பைல்கள் ஒவ்வொன்றாகத் திறக்கப்படத் தொடங்கியுள்ள நிலையில்தான் எதிர்க்கட்சிகளுக்குள் ஒருவித பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. கொள்கைக்காகவும், மக்கள் நலனுக்காகவும் ஒன்றுசேர்ந்ததாகக் கூறிக்கொண்ட இந்தக் கூட்டணிகள், பங்காளிகள் விசாரணைகளின் அச்சுறுத்தல் காரணமாக இன்று தனித்தனியே சிதறி, தங்களை எங்கு தற்காத்துக் கொள்வது என்று திசைதெரியாமல் திணற ஆரம்பித்துள்ளனர். இதன் வெளிப்பாடாகவே தற்போது பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் அதன் பங்காளிகள் தமது கூட்டணித் தலைமையுடன் முரண்படத் தொடங்கியுள்ளனர்.
இலங்கை பாராளுமன்றம் 225 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து பொது வாக்கெடுப்பு மூலம் 196 உறுப்பினர்கள்பாராளுமன்றத்திற்கு மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.மீதமுள்ள 29 உறுப்பினர்கள், நாடு முழுவதும் கட்சிகள் பெறும் மொத்த வாக்கு விகிதாசாரத்தின் அடிப்படையில், அந்தந்தக் கட்சிகளால் சமர்ப்பிக்கப்படும் தேசியப் பட்டியல் மூலமாக நியமிக்கப்படுகின்றனர். தற்போது இலங்கையை ஜே .வி.பி.-தேசியமக்கள் சக்தி ஆட்சிசெய்துவரும் நிலையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இது அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொடுத்துள்ளது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளது.இக்கட்சிக்கு பாராளுமன்றத்தில் 40 உறுப்பினர்கள் உள்ளனர்.
இதனை விட சி.வி.கே சிவஞானம் தலைமையிலான இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு -8 , ஆரியவன்ச திசாநாயக்கா தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணிக்கு -5, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு-3 , ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு-3,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுக்கு -1, ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு- 1,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு-1,திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரத்திற்கு -1,அர்ச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேச்சைக் குழு 17க்கு 1,தமிழ் தேசியக்கட்சிகளின் கூட்டணி தலைமையிலான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு-1. காதர் மஸ்தான் தலைமையிலான ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சிக்கு-1என்ற அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இலங்கை அரசியலிலும் பாராளுமன்றத்திலும் தற்போது பிரதான எதிர்க்கட்சியாகவுள்ள சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் பங்காளிக்கட்சிகளாக மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, (தேசியப்பட்டியல் எம்.பி, உட்பட 3 எம்.பி.க்கள்) ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (தேசியப்பட்டியல் எம்.பி, உட்பட 5 எம்.பி.க்கள்) ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், (தேசியப்பட்டியல் எம்.பி, உட்பட 3 எம்.பி.க்கள்) உள்ளனர்,இந்தப் பங்காளிகள்தான் தற்போது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேறத் தயாராகி வருகின்றனர்
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பங்காளிகளாக உள்ள சிறுபான்மை கட்சிகள், சஜித் அணியின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் அரசியல் திட்டங்கள் குறித்து மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளன. கூட்டணி உருவாக்கப்பட்டபோது அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் மற்றும் கொள்கை ஒப்பந்தங்களிலிருந்து பிரதான கட்சி விலகிச் செயல்படுவதாக சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் கருதுகின்றனர் .அதனாலேயே அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக்ககூட்டணியிலிருந்து வெளியேற விரும்புகின்றனர் என்றவாறாக தகவல்கள் கசிகின்றன.
இந்த தகவல் கசிவை உறுதிப்படுத்தும் விதமாக ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், பழனி திகம்பரம் மற்றும் மனோ கணேசன் போன்ற சிறுபான்மை கட்சித் தலைவர்கள் கூட்டணியின் சில முடிவுகளைப் பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர்.கூட்டணிக்குள் நிலவும் உட்கட்சி நெருக்கடியை மேலும் வெளிப்படுத்தும் விதமாக, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் எம்.பி., சமீபத்தில் குருநாகலில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு அதனை மேலும் உறுதிப்படுத்தியது
ரிஷாத் அங்கு பேசும்போது நான் ஐக்கிய மக்கள் சக்தியினதோ சஜித்தினதோ அடிமை அல்ல.ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஒரு அரசியல் கட்சி மட்டுமே அதில் நான் ஒரு பங்காளியாக மட்டுமே இருகின்றேன் .2 ஜனாதிபதித் தேர்தல்களிலும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காகத் எ மது கட்சியின் ஆதரவாளர்கள் பல மில்லியன் ரூபாவை செலவிட்டு, இரவு பகலாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர்.குறிப்பாக தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள், மற்றும் அமைச்சுப் பதவிகள் ஆகியவை கட்சிகளுக்கிடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே பகிர்ந்தளிக்கப்பட்டன. எனினும், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி தற்போது விலகி செல்கிறது.இந்தச் செயற்பாடு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது அதிருப்தியை தெரிவித்திருந்தேன்.நாங்கள் அவருடன் இணைந்து நின்றது அவருடைய கொள்கைகள் மற்றும் அடிப்படைக் கோட்பாடுகளுக்காகத்தான். எவ்வளவு பெரிய அரசியல் பின்னடைவைச் சந்தித்தாலும், அந்தக் கொள்கைகளைக் காட்டிக்கொடுக்க வேண்டாம் என்று நான் அவரிடம் கூறினேன்” எனத் தெரிவித்திருந்தார்
அடுத்தவரான தமிழ் முற்போக்கு கூட்டணித்தலைவரான மனோகணேசன் எம்.பி.யும் அண்மைய நாட்களாக சஜித் பிரேமதாசவையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் கடுமையாக விமர்சித்து வருவதுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையும் அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தியையும் புகழ் பாடி வருகின்றார். அடுத்த பங்காளியான ரவூப்ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தில் மதில் மேல் பூனையாகவேயுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியுடனான இந்த பங்காளிகளின் புகைச்சல் இன்னுமொரு சம்பவம் ஊடாக மேலும் உறுதிப்படுத்தப்பட்டது,வழக்கமாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மாதத்திற்கு ஒரு தடவை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியிலுள்ள தனது எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வடக்கு,கிழக்கு ,மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்கட்சிப்பக்கத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அம்மாகாண நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவது வழக்கம் .அந்தவகையில் கடந்த 5 ஆம் திகதியும் அவர் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல் நடத்தினார்,
இந்தக்கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணித்தலைவரான மனோகணேசனோ அல்லது இணைத்தலைவர்களான இராதாகிருஷ்ணன் ,திகாம்பரம் எம்.பி.க்களோ முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீமோ ,செயலாளரான நிஸாம் காரியப்பரோ தவிசாளரான ஹிஸ்புல்லாவோ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான ரிஷாத் பதியுதீனோ பங்கேற்கவில்லை. இந்தப்பறக்கணிப்பே ஐ க்கிய மக்கள் சக்தியுடனான பங்காளிகளின் முறுகலை மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் அரசியல் திட்டங்கள் குறித்து பங்காளிகள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளதாகவும் .கூட்டணி உருவாக்கப்பட்டபோது அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் மற்றும் கொள்கை ஒப்பந்தங்களிலிருந்து பிரதான கட்சி விலகிச் செயல்படுவதாக இந்த பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கருதுவதாகவும் அதனாலேயே ஐக்கியமக்கள்சக்தியுடனான கூட்டணியிலிருந்து வெளியேறுவது தொடர்பில் சிந்தித்துவருவதாகவும் கூறப்படுகின்றபோதும் உண்மை அதுவல்ல.
இந்த பங்காளிக் கட்சித் தலைவர்கள் மீதுள்ள சில ஊழல் ,மோசடிக்குற்றச் சாட்டுக்கள்.இவர்களில் சிலருக்கு எதிராக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் போன்ற சட்ட நடவடிக்கைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உள்நோக்கத்துடனேயே ஐக்கியமாக்கல் சக்தியிலிருந்து வெளியேறி , தற்போதைய அரசாங்கத்திற்கு மறைமுக ஆதரவளிக்க, அல்லது நாம் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல எனக் காண்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. தற்போதைய அநுரகுமார அரசினால் கடந்த ஆட்சியில் ஊழல் ,மோசடிகளில் ஈடுபட்ட பிரபல அரசியல்தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் வேட்டையாடப்பட்டு சிறைகளில் தள்ளப்பட்டும் நீதிமன்றங்களுக்கு அலைந்து திரிந்தும் வரும் நிலையில் தமக்கும் இவ்வாறான நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் ஒரு தற்பாதுகாப்பு நடவடிக்கையாகவே ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேற இந்தப் பங்காளிகள் சிந்திக்கின்றனர்
2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட ஊழல் மோசடி தொடர்பான 70 கோப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விசாரணைகள் அரசியல் பழிவாங்கல் அல்ல, பழைய வழக்குகள் சட்டப்படி காலாவதியாவதைத் தடுக்கவே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் பெரும்பாலானோர் இந்த கோப்புக்குள் உள்ளடங்குகிறார்கள் .முன்னர் பல ஆண்டுகள் நீடித்த முதற்கட்ட விசாரணைகளை இனி ஒரு மாதத்திற்குள் முடித்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அனுப்ப வேண்டும் என புதிய வழிகாட்டுதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போது பிரதான எதிர்கட்சியிலுள்ள பங்காளிகளிடையில் இந்தப் பதற்றமும் கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான சிந்தனைகளும் ஏற்பட்டுள்ளன.
இந்தப் பங்காளிக்கட்சித்தலைவர்கள் சிலர் மீது அவர்கள் அமைச்சர்களாக இருந்தபோது செய்த ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள்,உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதல் குற்றச்சாட்டுக்கள்,காடழிப்பு,,காணிகள் அபகரிப்பு, அரச நிதி பயன்பாட்டு மோசடி,சட்டவிரோதமாக காணிகள் பகிர்ந்தளிப்பு,கானா தங்க மோசடி, தனியார் பல்கலைக்கழக நிர்மாணம், சொத்துக் குவிப்பு ,சவூதி அரேபியாவிலிருந்து பெறப்பட்ட பல பில்லியன் ரூபா நிதியுதவி, அதன் மூலம் வெளிநாட்டுப் பணம் நாட்டிற்குள் வந்த விதம் மற்றும் அரச காணிகள் பயன்படுத்தப்பட்டமை, அரசாங்கத்திற்குச் சொந்தமான விமான நிலையங்கள் மற்றும் வான்சேவைகள் நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் என பல்வேறு குற்றச் சாட்டுக்களும் உள்ள நிலையிலேயே எங்கே தமது ”பைல்”களும் மீண்டும் தூசுதட்டப் படலாம் என்ற அச்சத்தில் இவர்கள் எதிர்க்கட்சியின் பங்காளிகள் என்ற கூட்டணியிலிருந்து வெளியேற விரும்புகின்றனர் .
இதில் ஒரு சில பங்காளிகளிடம் இன்னொரு திட்டமும் உள்ளது.சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இனிமேல் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை. அதனால் அதில் தொடர்ந்தும் பங்காளிகளாக இருந்தால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என்ற வகையிலேயே தொடர்ந்தும் பயணிக்க வேண்டி வரும்.அநுரகுமார அரசாங்கத்தையும் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே பயணிக்க வேண்டிவரும். அதனால் தற்போது அதிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என்ற அடிப்படையில் செயற்பட்டால் அரசாங்கம் தொடர்பான சில விடயங்களில் சுயமாக முடிவெடுக்கலாம். அதன் மூலம் அரசாங்கத்தை கடுமையாக எதிர்க்கவேண்டிய தேவையும் ஏற்படாது . அதனால் அரசாங்கத்துடன் ஒரு நட்புறவைப் பேணி தம்மைப் பாதுகாத்துக் கொள்வதுடன் தனிப்பட்ட ரீதியான சில அனுகூலங்களையும் பெறமுடியுமெனவும் கணக்குப் போட்டுள்ளனர். இதனாலேயே தற்போது அரச ஆதரவு,அல்லது அடக்கி வாசிக்கும்.அல்லது அரச புகழ் பாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


















