நான் ஆட்சியராக இருந்திருந்தால் சுட்டு தள்ளியிருப்பேன்யென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என த.வெ.க. கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, தற்போதைய ஆட்சியில் ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என்று விமர்சித்தார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது;-
“நான் ஆட்சியராக இருந்திருந்தால் என்கவுன்டர் செய்திருப்பேன்; சுட்டுத் தள்ளியிருப்பேன். வீடு தேடி வந்து பிரச்சினை செய்தால் அவர்களை என்ன செய்வது? வாருங்கள் என்று சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கவா முடியும்? அடித்து, உதைத்து, சுட்டுத் தள்ளிவிட வேண்டும். அந்த ஆட்சியருக்கு எவ்வளவு மனவேதனை இருந்திருக்கும். இந்த ஆட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் பாதுகாப்பில்லை, சாதாரண குடிமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழல்தான் நிலவுகிறது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.



















