பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 காவலர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளை தடுக்க காவல்துறை நேற்று மதியம் வாகனங்களில் ரோந்து சென்றனர். அப்போது அருகிலுள்ள மலை உச்சியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் காவல்துறை வாகனங்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில் 10 காவலர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 காவல்துறை வாகனங்களுக்கும் பயங்கரவாதிகள் தீ வைத்தனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.



















