முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் காலமானார். சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியவர் சி.எஸ்.கர்ணன். சென்னையில் வசித்து வந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் கர்நாதம் கிராமத்தில் 1955-ம் ஆண்டு பிறந்த சி.எஸ்.கர்ணன், 1983-ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியில் சேர்ந்தார். பின்னர், 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். தொடர்ந்து 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட சி.எஸ்.கர்ணன், 2017-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதி உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். கருணாநிதி என்ற இயற்பெயர் கொண்ட இவர், தனது மனைவியின் விருப்பத்திற்கேற்ப தன்னுடைய பெயரை கர்ணன் என்று மாற்றிக் கொண்டார். சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் பணியாற்றியபோது பல்வேறு நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சி.எஸ்.கர்ணன் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக பணியில் இருக்கும்போதே சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்து பயணித்த சி.எஸ்.கர்ணனின் மறைவுக்கு அக்கட்சி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



















