இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் “ஜான் டோ” திரைப்படம். பிரசாத் தேவினேனி மற்றும் ஷோபு யார்லகட்டா ஆகியோரின் தயாரிப்பில், மதுமிதா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ஜான் டோ.வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த சாராவின் மகன் நீராவ் திடீரென்று காணாமல் போய்விடுகிறான் . இதுஒரு புறம் இருக்க தமிழகத்தின் கேரளா எல்லையில் ஒரு ஆணின் பிணம் கண்டெடுக்கப்படுகிறது.இதுகுறித்த புலன்விசாரணையில் அந்த எல்லையில் உதவி ஆய்வாளராக இருக்கும் அர்ஜூன்தாஸ் இறங்குகிறார். அந்த ஆணின் கொலைக்கும் காணாமல்போன சிறுவனுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவருகிறது. அந்த கொலையை தொடர்ந்து பல சிறுவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். அதனால் காவல்த்துறை ஆய்வாளர் சஞ்சனா நேரடியாக விசாரணையை துவக்குகிறார். இதற்கிடையில் காணாமல்போன சிறுவன் நீராவ் வீட்டுக்கு வந்துவிடுகிறான். அப்படியானல் மற்ற சிறுவர்களளை கடத்தியது யார்? கொலையாளி யார்? அந்த மர்மத்தின் பின்னணி என்ன? என்பதை சொல்வதுதான் இப்படத்தின் மீதிக்கதை. காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்துக்கு தனது கம்பீரமான குரலாலும், உடல்மொழியாலும் வலுசேர்த்திருக்கிறார் அர்ஜூன் தாஸ். விசாரணையில் காட்டும் தீவிரமும், முகத்தில் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளும் அவரது நடிப்புக்கு பலம் சேர்க்கின்றன. சஞ்சனா நடராஜனும் காவல்துறை அதிகாரியாக கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். சாராவாக வரும் நடிகையின் இயல்பான நடிப்பு கதாபாத்திரத்தின் மனநிலையை உணரச் செய்கிறது. நீரவ், சிருஷ்டி, அனுபமா குமார், அர்ச்சனா, கார்த்திக் குமார், படவா கோபி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர். பிரீத்தி ஜெயராமனின் ஒளிப்பதிவு கதையின் மர்மத்தன்மைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. முஜீப் மஜித்தின் இசை காட்சிகளுக்கு துணை நிற்கிறது. அடையாளம் தெரியாத சடலம், காணாமல் போகும் சிறுவர்கள், நினைவுகளை இழக்கும் குழந்தை என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை போலத் தோன்றும் சம்பவங்களை ஒரே கதைக்குள் இணைத்திருப்பது இயக்குனரின் சுவாரஸ்யமான முயற்சி. குறிப்பாக, சிறுவர்கள் மாயமானதன் பின்னணியில் வரும் திருப்பங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால், முதல் பாதியில் இருந்த வேகமும் பரபரப்பும் இரண்டாம் பாதியில் சற்றுக் குறைகின்றன. விறுவிறுப்பாக நகர வேண்டிய சில காட்சிகளில் நீளமான வசனங்கள் வேகத்தடையாக மாறுகின்றன. வில்லன் கதாபாத்திரத்தின் உளவியல் பின்னணியிலும் இன்னும் கூடுதல் அழுத்தம் கொடுத்திருக்கலாம். குற்றம், மர்மம், உளவியல் சிக்கல்கள் எனப் பல அம்சங்களை ஒன்றிணைத்து வித்தியாசமான திரில்லர் அனுபவத்தைத் தர முயன்றிருக்கிறார் இயக்குனர் மதுமிதா. சில குறைகள் இருந்தாலும், சிறுவர்கள் காணாமல் போகும் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்ம முடிச்சுகளும், எதிர்பாராத திருப்பங்களும் படத்தை கவனிக்க வைக்கின்றன.



















