தென்ஆப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கி சூடு சம்பவங்களில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். தென்ஆப்பிரிக்காவில் இருவேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஆண்கள், பெண்கள் என 17 பேர் கொடூர கொலை செய்யப்பட்டு உள்ளனர். அந்நாட்டின் தலைநகர் பிரிட்டோரியாவுக்கு வெளியே காலி இடத்தில் 9 உடல்கள் காலை கிடந்துள்ளன. சாக்கு ஒன்றில் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டு இருந்த உடல்களின் பல்வேறு பாகங்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்ததில் ஏற்பட்ட காயங்கள் தென்பட்டுள்ளன. அவர்களில் 6 பேர் ஆண்கள். 3 பேர் பெண்கள் ஆவர். அந்த உடல்களை காவல்துறை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்பின்னர், பீட்டர்மாரிட்ஜ்பர்க் நகரின் கிழக்கே கிராமப்புற பகுதியில் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட வாகனம் ஒன்று நீண்டநேரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றிய தகவல் அறிந்து காவல்துறை சென்று சோதனையிட்டனர். அதில், 8 ஆண்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு, பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தனர். இந்த சம்பவத்திற்கான பின்னணி பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. அதற்கான நோக்கமும் தெரியவில்லை. கொல்லப்பட்ட நபர்கள் யாரென்று அடையாளம் காணப்படவில்லை. ஆனால் கடந்த காலங்களில் இதுபோன்று நடந்த சம்பவங்களில் கொள்ளை, போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்கள் இவற்றிற்கு பின்னணியாக கண்டறியப்பட்டு உள்ளன என காவல்துறை தெரிவித்துள்ளனர்.



















