உலகிற்கு தற்போது அமைதி, நிலைத்தன்மை தேவை என்று ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார். பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் ஆசியான் அமைப்பு நடத்தும் 23வது ஆசியான் – இந்தியா மாநாடு, 21வது ஆசியான் – கிழக்காசிய மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்நிலையில், 23வது ஆசியான் – இந்தியா மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. 11 நாடுகளை உள்ளடக்கிய இந்த கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் மோடி பேசியதாவது; இந்தியாவும், ஆசியான் கூட்டமைப்பு நாடுகளும் உலக மக்கள் தொகையில் 4ல் ஒரு பங்கை பெற்றுள்ளது. இந்த கூட்டமைப்பின் நோக்கம் ஒத்துழைப்பே தவிர போட்டி அல்ல. இந்த கூட்டமைப்பின் ஒற்றுமைக்கும், மைய நிலைக்கும் இந்தியா உறுதுணையாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக உலகம் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. உலகிற்கு தற்போது அமைதி, நிலைத்தன்மை தேவை. நமது எதிர்காலத்தை ஒன்றிணைந்து வழிநடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

















