யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் ராஜ்சோமவின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டதுடன், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் தொடர்பான நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கைக்கும் தீ வைக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என அறியப்படுகின்றது
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், சர்வதேச நீதியை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை 17ம் திகதி அன்று (17.11.2026) முன்னெடுத்தது.

அரியாலை தபால்கட்டைச் சந்தியிலிருந்து முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடனும் சுயாதீனமான முறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியம் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் தமக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்து, அதனை நிராகரிக்கும் வகையில் அறிக்கையின் பிரதிக்கும் ராஜ்சோமவின் உருவப்பொம்மைக்கும் தீ வைத்து மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் முழுமையான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுடன், நீதிக்கான போராட்டத்தில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது



















