Dr. புட்பா கிறிட்டி, 647 703 5538,
‘உள்ளத்தால்‘ என்பது மனதினால், மனத்தின் வழியாக, அல்லது மனத்தின் இயல்பால் என்று பொருள்படும். குறிப்பாகத் திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியங்களில், ஒருவரின் உள்ளுணர்வால், உள்நோக்கத்தால், அல்லது மனதின் எண்ணங்களால் செயல்படுவதைக் குறிக்கும். அது ஒருவரின் நேர்மையையும், தூய்மையையும் உணர்த்தும். இப்படிப் பல்வேறு அர்த்தங்கள் கொண்டது இச் சொல்.
ஒருவன் தன் மனத்தால் ஒரு செயலை வெளிப்படையாகச் செய்யாமல், மனதிற்குள்ளேயே நினைப்பது அல்லது எண்ணுவது உள்ளத்தால் எனப் பொருள்படும்.
உள்நோக்கத்தால் என்பது, வெறும் வார்த்தைகளால் அல்லாமல், மனதின் உண்மையான எண்ணத்தின் அடிப்படையில் செயல்படுவது என்பதை உணர்த்துகிறது.
தூய்மையான மனத்தால் ஒருவன் ஒரு செயலை நேர்மையாகவும், தூய்மையாகவும், எந்தவொரு வஞ்சகமும் இல்லாமல் செய்வது மிகப் பெரும் செயலாகும்.
சிறப்பு வாய்ந்த மனத்தால் என்பது, பொதுவாகத் துறவிகளின் சிறப்பு வாய்ந்த மனதைக் குறிப்பது. அதாவது, “உள்ளத்தால் உள்ளலும் தீதே” – குற்றங்களைத் துறந்தவரின் மனத்தாலும் நினைப்பது தவறு என விளக்குகிறது.
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். (குறள். 282)
இக்குறள், அறத்துப்பாலில் துறவறவியலில் கள்ளாமை என்னும் அதிகாரத்தில் இடம்பெற்ற குறளாகும். இதன் பொருள்
உள்ளம் என்பது மனம், உள்ளக்கருத்து என்பது அச் சொற்றொடரின்கருத்து, எண்ணம் என்பது ஞானம்.
இதைவிட அகச்சான்று – ஆன்மா, ஊக்கம், முயற்சி, உள்ளம் என்பனவும் உள்ளத்தால் எனும் சொல்லுக்குட்பட்டவையே!
உள்ளத்தால் என்பது வெளிக்காட்டிக்கொள்ளாமல் அல்லது ரகசியமாக அல்லது மனத்தால் கூட, எனவும் எடுத்துக்கொள்ளலாம்.
உள்ளுதல் – நினைத்தல், ஆராய்தல், நன்குமதித்தல், மீண்டும் நினைத்தல், இடைவிடாது நினைத்தல் எனப் பொருள்படும்.
உள்ளலும் – நினைத்தலும்
உள்ளல் – உள்ளுதல், நினைத்தல், எண்ணுதல், மகிழ்தல், கருதல், எண்ணியிரங்கல்.
தீது – தீமை. குற்றம், பாவச்செயல், துன்பம், இறப்பு, கேடு, உடம்பு, இடையூறு.
தீதே – தீங்கே, தவறே, தீமை
பிறன் – மற்றையான், அயலான், மனம்வேறுபட்டவன், பகைஞன்.
பிறன்பொருளைக் – மற்றவர் பொருள்கள் மீது உடைமைகள் மீது கள்ளம் – வஞ்சகம், பொய், களவு, குற்றம், அவிச்சை, மற்றும் புண்ணிலுள்ள அசறு.
கள்ளத்தால் – சூழ்ச்சியால் / வஞ்சனையால்
கள்வேம் – அடையவேண்டும்
எனல் – என்ற எண்ணம் கூட
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். (குறள். 282)
முழுப்பொருள்
பிறர் பொருள்கள், உடைமைகளை அடையவேண்டும்; வஞ்சித்து அடையவேண்டும்; களவு/சூழ்ச்சி செய்து அவருக்கு தெரியாமல் அடைய வேண்டும் என்று தன்னுடைய மனதினால் உள்ளூர ரகசியமாய் நினைத்தலும் கூட தீதே என்றுரைக்கிறார் திருவள்ளுவர்.
இது மனதை தூய்மையாய் வைக்கும் பொருட்டு துறவறவியலில் திருவள்ளுவர் கூறியுள்ளார்.
இதனை எடுத்து நாம் ஆராயும் போது, இன்றைய காலத்தில், உள்ள துறவிகள். மனத்தூய்மை அற்றவர்களாக இருப்பதை நாம் காணலாம். எல்லோரும் என்றில்லை என்றாலும், சிலர், நம் சமூகத்தில், புல்லுருவிகளாக இருந்து, கொடுமைகள் செய்து, வாழ்வதைக் காணலாம். அதிலும் பலர் தாங்கள் தூய துறவிகள் எனக் கூறினாலும், சொத்துக்காக, பதவிக்காக, வாழ்க்கை வளத்துக்காகத் துறவறத்தை மேற்கொண்டு வாழ்வதைக் கண்டிருக்கிறோம்.
எங்கள் முன்னைய பாப்பாண்டவர், ஜோன் இரண்டாம் போல், ஏழைகளின் மீது மிகவும் அன்பு கொண்டிருந்தார். அதிலும், அவர் செல்லும் ஒவ்வொரு நாட்டிலும் காலடி வைத்தவுடன், தரையில் நெடுஞ்சாண் கிடையாக விழந்து, வணங்கிய பின்னர் தான் அங்குள்ள அரசத் தலைவர்கட்கு கைகுலுக்குவார்.
இதுபோலவே போப் பிரான்சீஸ் தெற்கு சூடானிய தலைவரின் கால்களில் விழுந்து மன்றாடி போரை நிறுத்தும் படி வேண்டுதல் செய்தார். இது உண்மையான துறவறத்தின் மேன்மையான மனப்போக்கு என்பதை நாம் அறியலாம். இதற்குரிய யுடியுப் பதிவை நான் எமது குழுமத்தில் இட்டு வைக்கிறேன். நீங்கள் பாருங்கள்.
அது போலவே அன்னை தெரேசா, தன் கைகளில், காறி உமிழ்ந்த முஸ்லிமிடம் மறுகையை நீட்டி, “நீ தந்ததை நான் ஏற்றுக் கொண்டேன். என் குழந்தைகட்குத் தரவேண்டியதைத் தா” என இரந்து நின்றார். இப்படி வாழும் துறவிகளும் உலகில் வாழ்ந்து தானுள்ளனர் என்பதை அறியலாம் தானே!
இரண்டு நாட்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு குருவானவர் அழைத்தார். அவரை எனக்கு சுமார் 6 ஆண்டுகளாகத் தெரியும். அவர், இலங்கை காலி மாவட்டத்தில் வேலை செய்த போது, என்னிடம், அங்குள்ள ஏழைக் குழந்தைகளுக்கு பாடசாலை பைகளுக்காகவும், காலணிகட்காகவும் உதவி கேட்டார். நான் என் குழந்தைகளின் உதவியுடன் அந்தச் சிறார்கட்கு உதவினேன். காரணம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள், காலணி இல்லாது பாடசாலை செல்லும் போது, அட்டைகள், அவர்கள் கால்களில் ஒட்டிக் கொண்டு இரத்தம் குடித்து, முடித்த பின்னரே கீழே விழும். ஆக அந்தக் சிறுவர்கள் வேதனையுடன் தானே பாடசாலைக்குச் செல்வார்கள். பசியுடன், வேதனையுடன், புத்தகங்களைச் சுமந்து செல்வார்கள். அதனை அந்தக் குருவானவர் எனக்குப் புரிய வைத்த போது, அதனை நான், என் பிள்ளைகளிடம் கூறினேன். அவர்கள் மனம் இரங்கினார்கள். உண்மையான மனத்துடன் செயலாற்றும் இந்த குருவானவரின் தேவைக்கு உதவினார்கள். இது தவிர கிறிஸ்துமஸ் காலங்களில், சுமார் 200 குடும்பங்களுக்கு சுமார் 2500 ரூபாப்படி, ஒரு நாளைக்குரிய அரிசி, பருப்பு, சோயா, பால்மா, மரக்கறிகள் வாங்கித் தருவதற்கும் உதவினோம். அனைத்தும் எமக்கு புகைப்படமாக எடுத்து அனுப்புவார் குருவானவர். என் குழந்தைகள், அந்த ஏழைகளின் சிரிப்பைக் கண்டு மனம் பூரிப்பார்கள்.
இன்று அதே குருவானவர், யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு குருமாணவர் மடத்துக்கு தலைமை வகிக்க வந்துள்ளார். என்னிடம் அங்கு பயிலும் சுமார் 50 மாணவர்க்கு ஒரு நாள், நல்ல உணவு தர பணம் தந்து உதவும்படி வேண்டினார். நான் என் பிள்ளைகளிடம் சொன்னதும், அவர்களும் தருவதாகச் சொன்னார்கள். காரணம் அவர் ஒரு உண்மையான துறவி என்பதால். தனக்கென வாழாமல், பிறர்க்காக வாழும் அவரது தியாகப் பணியும், பண்பும் என் பிள்ளைகளுக்கு பிடித்திருக்கிறது.
பிறர் பொருளைத் திருடாமல், கொள்ளையடிக்காமல், மோசடி செய்து, தான் வாழ நினைக்காமல், பிறர்க்காக வாழும் அவரது பணிவாழ்வை என் பிள்ளைகள் மதிக்கிறார்கள். ஈழத்தில் நடந்த அனைத்துக் கொடுமைகளையும் அறிந்த என் பிள்ளைகள், அந்தக் கொடுமையான வாழ்வைத் தாம் அனுபவிக்கவில்லை என்றாலும், அங்குள்ள சிறுவர்கள், அனுபவிக்கும் அந்த துயரமான வாழ்வை எண்ணி, மனம் கசிவார்கள். தங்கள் பிறந்த நாட்களில், இங்கு கேக் வெட்டிக் கொண்டாடாமல், அங்குள்ள ஏழைக் குழைந்தைகட்கு அனுப்பி வைப்பார்கள் என் குழந்தைகள். ஆகவே உண்மை மனத்துடன் உழைக்கும் இந்தக் குருவானவரின் வேண்டுதலுக்கும் உடனேயே உதவ முன்வருவார்கள். இது தான் துறவறத்தின் பெருமை. மேன்மை என்பதை அனைவரும் உணரவைக்க இந்தத் துறவியின் பங்களிப்பு ஒரு உதாரணமாகும்.
“உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின், உலகத்தார்
உள்ளத்துளெல்லாம் உளன்” (குறள். 294)
உள்ளத்தால் பொய்யாது நடந்து வருவானாயின், அவன் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இருப்பவன் ஆகும் சிறந்த உயர்வைப் பெறுவான்.
பொருள்: ஒருவன் தன் மனதிற்குத் தெரியாமல் பொய் சொல்லாமல் வாழ்ந்தால், அவன் உலக மக்கள் அனைவரின் மனங்களிலும் நிலைத்திருப்பான், அதாவது, உயர்ந்த நிலையை அடைவான் என்பது கண்கூடு. சுருக்கமாகக் கூறினால், ‘உள்ளத்தால்‘ என்பது வெறும் உடல் ரீதியான செயல் அல்ல, அது ஒருவரின் உள்ளத்தின் நேர்மை, தூய்மை, மற்றும் உள்நோக்கத்தை வலியுறுத்தும் ஒரு செயல்.
என் வாழ்வின் அனுபவமாக ஒரு நிகழ்வைக் கூறவிழைகின்றேன்.
அண்மையில் இறந்த என் அண்ணா, யேசுதாஸ் அந்திரேஸ், எங்கள் குடும்ப வளர்ச்சியில் பெரிதும் பங்கெடுத்தவர். இன்று நாங்கள் அனைவரும் உயிருடன் வாழ்வதற்கு என் அண்ணா அன்று செய்த பல தியாகங்கள் தான் காரணமாகும். எப்படியெனில், அவர் தான், இலங்கையை விட்டு, 1979ஆம் ஆண்டு, ஜேர்மன் சென்று குளிரிலும், பனியிலும் வேலை செய்து, எம் குடும்பத்தைக் காத்தார். பின்னர், எப்படியோ 1983ல் கனடா வந்தார். இளமையை அனுபவிக்கும் அந்த நாட்களில், மேலும் இங்கு கொட்டும் கடும் பனியிலும் குளிரிலும் வேலை செய்து, அவர் என் பெற்றோரையும், 18 வயதுக்குட்பட்ட 2 சோதரிகளையும் கனடா கொண்டு வர ஆவன செய்தார். அந்த வேளையில் கனடிய அரசு, ஒரு திட்டம் கொண்டு வந்தது. அதாவது திருமணம் செய்யாத சகோதர, சகோதரிகட்கும் கனடா கொண்டு வர அனுமதி கொடுக்கவே, மேலும் எம்மையும் கனடா அழைத்து வந்தார். இப்படி ஒரே நேரத்தில் 7 பேர்கள் கனடா வந்தோம். என் மூத்த அண்ணா சோமாலிய நாட்டிலிருந்து, இலங்கை செல்ல முனைந்த போது, அவரையும் குடும்பத்துடன் இங்கு வரச் செய்தார். அது போலவே என் சின்னண்ணா, கப்பலில் வேலை செய்து கொண்டிருந்தவரை, இங்கு கொண்டு வந்தார். அவர் குடும்பமும் இங்கு வந்து சேர்ந்தது. என் அக்காவின் கணவரை இங்கு கொண்டு வர, அவர் இங்கு வந்து, அவரது அகதி வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதும், என் அக்காவையும் குழந்தையையும் கனடா கொண்டு வந்து, இன்று எம் முழுக்குடும்பத்தையும் வாழ்வைத்து விட்டு, தன் உயிரைத் தியாகம் செய்து, மண்ணுக்குள் மறைந்தார்.
அவரது மரண வீட்டுக்கும், அவரது உடலுக்கு அஞ்சலி செய்ய வந்த அனைத்து அறிஞர்களும், என் அண்ணாவின் தியாகத்தையும், நல் வாழ்வையும் பெருமையாகப் பேசிச் சென்றனர். அரசின் சட்ட திட்டங்களுக்குப் பணிந்து, பொய் சொல்லாமல், உண்மையாக வாழ்ந்தவர் என் அண்ணா, அரசை ஏமாற்றாமல், உண்மையான மனத்துடன், உழைப்புடன் வாழ்ந்து, எங்கள் குடும்பத்தைக் கனடா கொண்டு வந்து விட்டவர். எம் வளர்ச்சிக்கும் வழி காட்டிவிட்டுச் சென்றுள்ளார். அன்று அவர் இப்படி ஒரு முடிவு எடுக்கா விட்டால், நாங்கள் இலங்கையில் நிகழ்ந்த போர்களினாலும், வான் தாக்குதல்களினாலும் உயிரை இழந்து என்றோ மறைந்து, மண்ணோடு மண்ணாகி அழிந்திருப்போம். ஆனால், அவர் தன் மனத்துள் எம்மை உண்மையாக நேசித்து, அதனால், தனது துயரை மறந்து, தியாகப் போக்குடன், மனம் வைத்து, எம்மை இங்கு அழைத்து வந்தார். அவர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவர் என்றும் எம் குடும்பத்தின் விடி வெள்ளியாக, குலவிளக்காக, எம் பரம்பரையில் நிலைத்து வாழ்வார் என்பது உண்மையல்லவா! அவரின் தியாக வாழ்வை நினைத்துப் பார்க்கும் எம் சோதர சோதரிகள், மக்கள், மருமக்கள், பேரர்கள் முன்னால் அவர் ஒரு உண்மையான மனிதராக, தூய உள்ளம் கொண்ட தியாகியாக, வாழ்வார் என்பதில் நம்பிக்கை உள்ளது.
ஆத்திச்சூடிக் கருத்துக்கள் பின்வருமாறு கூறுகின்றன.
கொள்ளை விரும்பேல்
சூது விரும்பேல்
தீவினை அகற்று
துன்பத்திற்கு இடம் கொடேல்
நுண்மை நுகரேல்
மனம் தடுமாறேல்
இவை உள்ளத்தால் குற்றமின்றி, குறையின்றி மனிதன் வாழ்வேண்டும் என வலியுறுத்தும் கருத்துகள்.
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். (குறள் – 309)
ஒருவன் உள்ளத்தாலும் சினத்தைப் பற்றி நினையாதவன் என்றால், அப்படிப்பட்டவன் நினைத்தது எல்லாம் உடனே அவனை வந்தடையும்.
இன்றைய காலகட்டத்தில், சினம் என்பது ஒவ்வொரு மனிதனையும் ஆட்டிப்படைக்கும் ஒரு பண்பாகும். ஆனால், அவன் சினம் காத்து வாழ்வான் என்றால், அவன் நினைப்பது யாவும் பலிக்கும். கேட்பது யாவும் கிடைக்கும். எதிர்பார்ப்பவை எல்லாம் பலன் தரும்.
என் கல்லூரி நாட்களில், எனக்கு சிந்தாமணி என்னும் ஒரு செட்டியார் குல நண்பி இருந்தாள். ஒரு விடுமுறை காலத்தில், என்னையும் என் தங்கையையும் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தாள். நாங்களும் இலங்கை சென்று வருவது அதிக செலவு என்பதால், செட்டிநாடு பார்க்கவும். அவள் தாய்தந்தையரின் அழைப்பின் பேரில், அவளை அழைத்துச் செல்ல வந்த காரில் ஏறி அங்கு சென்றோம்.
நானும் என் தங்கையும் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளோம் என்னும் அனுதாபத்தினால். எமக்கு அன்பான உபசரிப்பும் வரவேற்பும் அவர்கள் பெற்றோரிடமிருந்து கிட்டியது. நாங்கள் இருவரும் உண்மையில் அவர்கள் காட்டிய அன்பினால் பூரித்துப் போனோம்.
உணவுக்கு உணவு, பட்சணங்களுக்கு பட்சணம், கடைத்தெருவுக்கு அழைத்துச் சென்று புதிய உடுபுடவைகள் வாங்கிக் கொடுத்தார்கள். எம் யாழ்ப்பாண முருங்கைக் காய் கறிசெய்து தரும்படி கேட்டார்கள். அவர்கள் தோட்டத்து முருங்கைக் காய்கள் பறித்துக் கொடுத்தார்கள். வேலைக்காரர்கள் தேங்காய், உப்பு, மஞ்சள், கடுகு, இஞ்சி, பூண்டு அம்மியில் வைத்து அரைத்துக் கொடுத்தார்கள். நானும் தங்கையும் சமைத்துக் கொடுத்தோம். அத்தனை சுவையாக உள்ளதாகக் கூறி உண்டு மகிழ்ந்தார்கள். அன்று மாலை அவர்களின் சொந்த சினிமாத் தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர். பல்கணியில் அமர்ந்து சினிமா பார்த்து ரசித்தோம். ஆனால், மாலையில் அந்த பெண்ணின் தந்தை, தன் வேலைக்காரன் ஒருவனிடம் அதிகம் சினம் கொண்டு, கத்தினார். அவனை வேலையை விட்டுத் தூக்கி விட்டார்.
நானும் தங்கையும் மிரண்டு போனோம். ஒரு மனிதன் இந்தளவுக்கு எமக்கு அன்பு காட்டியவர், இப்படிச் சினம் கொண்டு, ஒரு குடியானவனை வேலையை விட்டுத் தூக்கி விட்டாரே என நினைத்து, அவரை நாங்கள் எங்களுக்குள் வெறுக்கத் தொடங்கினோம். அங்கிருந்து புறப்பட வேண்டும் என நினைத்து, எங்கள் நண்பியிடம் சொன்னோம். அவளும், தன் தந்தையிடம் எமது விருப்பத்தைக் கூறினாள்.
அவருக்குப் புரிந்து விட்டது. தனது செயலால் தான் நாங்கள் புறப்பட வேண்டும் எனக் கூறியதை அவர் புரிந்து கொண்டார். ஆகவே அவர் எம்மை சமாதானம் செய்ய நினைத்து, எம்மை அழைத்து, ஒரு மாலை நேரத் தேனீர் விருந்து கொடுத்தார். அப்போது அவர் சொன்னார். “நான் அவரிடம் கோபம் கொண்டதாக நீங்கள் நினைத்தீர்கள். இல்லை நான் அப்படிச் செய்யவில்லை. அவர் தவறு செய்தார். அதனை அவருக்கு உணர்த்தவே அவரிடம் கூச்சல் போட்டேன். அவரை வேலையை விட்டுத் தூக்கினேன். நீங்கள் பயப்பட வேண்டாம். என்னைத் தவறாகவும் எண்ண வேண்டாம். நீங்கள் இங்கிருந்து பெங்களூர் புறப்படும் முன்னர், அவரை மீண்டும் வேலைக்கு அமர்த்தி விடுவேன்” என்றார்.
அதே போன்று மறுநாட்காலை, எங்களை ஏற்றிக் கொண்டு, அவர் நிறுவனத்துக்குச் சென்றார். அங்கே அதே மனிதர், வந்திருந்தார். தன் தவறுக்காக, இவரிடம் மன்னிப்புக் கேட்டார். இவரும் அவரை ஏழை என்றும் பாராமல், தன் மார்போடு கட்டி அரவணைத்து, புத்தி கூறி, மீண்டும் வேலை செய்ய அனுமதித்தார். தனது சினத்தை அவர் எப்படிக் கட்டுப்படுத்திக் கொண்டார் என்பதைக் கண்டு, நானும் என் தங்கையும் வியந்து நின்றோம். அப்போது தான் நான் நினைத்தேன் இவரின் அன்பை, பாசத்தை, கருணையை, அதிலும் ஒரு ஏழையைத் தண்டித்து, அவன் குடும்பத்தை நடுவழியில் விட்டு விடக் கூடாது எனும் தூய மனத்தை நான் கண்டு, மெச்சினேன். இன்னும் இவர் எப்படி பணத்தால் உயர்கின்றார் என்பதை பார்த்துப் பூரித்துப் போனேன்.
பணம் இன்று வரும் நாளை போய்விடும். ஆனால் உண்மையான மனித நேயம் இறந்து போய்விட்டால், அவன் மனிதம் இழந்த மரமாகத் தான் தெரிவான் அல்லவா! அப்படி நினைத்த இந்த மனிதர், என் இதயத்தில் மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்தார். அன்றிலிருந்து அவர் என்றுமே என் நினைவில் வந்து போவார். அப்பொழுதெல்லாம் நான் நினைப்பேன், தவறு செய்தவனுக்கு, அவன் தவற்றைப் புரிய வைப்பதற்காக, அவர் தன் சினத்தை வெளிப்படுத்தி, அவனைப் பயம் கொள்ள வைத்தாலும், மேலும் அவனை மன்னித்து, அவன் குடும்ப விடியலுக்காக உதவிய அந்த மனிதர், என் இதயத்தில் ஒரு மா மனிதராகத் தென்பட்டார். அதே நேரம் தன் பிள்ளைகளின் நண்பிகள் நாங்கள் தன்னைத் தவறாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காக, எம்மையும் அன்புகாட்டி, தன் நிலையை நியாயப்படுத்தி, தன் பணியாளனை மீண்டும் வேலைக்கு அமர்த்தி ஒரு நல்ல மனிதனாகத் தன்னை நிரூபித்தார்.
இப்படி ஒவ்வொரு மனிதனுள்ளும் மனித மாணிக்கங்கள் இருக்குமானால், இம் மாநிலம் மாட்சி அடையும். இங்கே மனிதம் தழைத்தோங்கும். மக்கள் அனைவரும் இன்புற்று வாழ்வார்கள். சாதி, மத, இன, மொழி எனப் பேதங்கள் மறைந்து நல்லதொரு சமுதாயம் உருவாகும். எங்கும் இன்பம் பொங்கும். இவை யாவும் நிகழ்வத்தற்கு மனிதன், உள்ளத்தால் உயர்ந்தவனாக வாழ்வேண்டும். அதனையே திருவள்ளுவர் இக்குறள்களின் மூலம் எமக்கு வழியுறுத்திக் கூறுகின்றார்.
முடிவுரை
மேற்காட்டிய இம்மூன்று குறள்களும் கூறும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்க்கலாம்.
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். (குறள். 282)
பிறர் பொருள்கள், உடைமைகளை அடையவேண்டும்; வஞ்சித்து அடையவேண்டும்; களவு/சூழ்ச்சி செய்து அவருக்கு தெரியாமல் அடைய வேண்டும் என்று தன்னுடைய மனதினால் உள்ளூர ரகசியமாய் நினைத்தலும் கூட தீதே என்றுரைக்கிறார் திருவள்ளுவர்.
இது மனதை தூய்மையாய் வைக்கும் பொருட்டு துறவறவியலில் திருவள்ளுவர் கூறியுள்ளார்.
“உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின், உலகத்தார்
உள்ளத்துளெல்லாம் உளன்” (குறள். 294)
உள்ளத்தால் பொய்யாது நடந்து வருவானாயின், அவன் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இருப்பவன் ஆகும் சிறந்த உயர்வைப் பெறுவான்.
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். (குறள் – 309)
ஒருவன் உள்ளத்தாலும் சினத்தைப் பற்றி நினையாதவன் என்றால், அப்படிப்பட்டவன் நினைத்தது எல்லாம் உடனே அவனை வந்தடையும்.
மேற்படி இந்த மூன்று குறள்களும் எமக்குக் கற்றுத் தருவது என்னவென்றால், துறவிகள் உள்ளத்தால் கள்ளமின்றி வாழவேண்டும் என்பதும், உள்ளத்தால் பொய்யாது நடந்தால், உலகத்தவர் உள்ளத்தில் உயர்ந்த இடத்தைப் பெறலாம் என்பதும். உள்ளத்தாலும் சினம் கொள்ளாதவன் வாழ்வில் உயர்ச்சி தானாக வந்தடையும் என்பதுமாகும்.
இக்குறள்கள் எனக்கு ஒரு அரிய குறளை நினைவூட்டி நிற்கின்றன. அதாவது,
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற (குறள். 34)
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
இந்த நிலையில், உள்ளத்தூய்மையுடன் ஒழுகும் ஒருவனின் வாழ்வு உயர்வடையும் என்பதனை திருவள்ளுவர் திறமையாக எடுத்துக் காட்டியுள்ளார். எனவே நாமும் திருவள்ளுவர் திருவாக்கை ஏற்று, நல்வாழ்வு வாழ்வோமாக.

















