பி.எஸ்.எல்.வி. ராக்கெட் 2027-ம் ஆண்டு முதல் காலாண்டில் விண்ணில் ஏவப்பட உள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார். இந்திய விண்வெளி சங்கம், இன்-ஸ்பேஸ் மற்றும் இஸ்ரோ சார்பில் டில்லியில் 5-வது இந்திய சர்வதேச விண்வெளி மாநாடு நடந்தது. இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசியதாவது: தொழில்துறையின் ஆதரவுடன் இஸ்ரோவால் மட்டுமே ராக்கெட்டுகள் கட்டப்பட்டன. ஆனால் இப்போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கீழ் செயல்படும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ (எல் ஆண்டு டி) கூட்டமைப்பிடம் 5 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் தயாரிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளன. அந்த ராக்கெட் தயாராகி வருகிறது. இது இஸ்ரோவுக்கு உதிரிபாகங்களை வழங்கும் நிறுவனமாக இருந்த நிலையிலிருந்து, தயாரிப்பு நிறுவனமாக மாறி உள்ளது. முதல் ஏவுதல் 2027-ம் ஆண்டு முதல் காலாண்டில் விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டு உள்ளன. வளர்ந்து வரும் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வும், 2047-க்குள் வளர்ந்த நாடாக மாறவேண்டும் என்ற இலக்கை அடையவும், விண்வெளித்துறையில் தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்துவதிலிருந்து உற்பத்தி அளவை அதிகரிப்பதன் பக்கம் இந்தியா நகரவேண்டும். தேசிய பாதுகாப்பு, தகவல் தொடர்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் பிற முக்கியமான துறைகளில் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தனியார் துறை மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் அதிகப்படியான பங்களிப்பு தேவைப்படுகின்றன. ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளது. அதனுடைய அனைத்து முக்கியப் பொருட்களும் தயாராக இருக்கின்றன. இஸ்ரோ தற்போது சுற்றுப்பாதை மாதிரியில் பணியாற்றி வருகிறது. மிக விரைவில் அந்தத் திட்டத்தை ஏவும். 440 நிறுவனங்களுடன் இணைந்து.. முழு நாட்டையும் பாதுகாக்க அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களும் ஒருங்கிணைந்த முயற்சிகளும் தேவைப்படுகின்றன. இந்தியாவின் விண்வெளிச் சூழல் ஒரே ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திலிருந்து சுமார் 440 நிறுவனங்களாக விரிவடைந்துள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் திட்டங்களுக்கான பட்ஜெட்டில் 70-80 சதவீதம் உள்நாட்டுத் தொழில்துறைக்கே திரும்பச் செல்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
















