ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ராணுவத் தளங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் ஈரானின் பதிலடி தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் போர்ப்பதற்றம் நிலவுகிறது.
முன்னதாக ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாக்களுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு இஸ்ரேலை தாக்கிய ஈரான், இஸ்ரேலுக்கு எதிராக அணு குண்டுகளை தயாரித்து வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. அப்படி அணு ஆயுத பலம் பொருந்திய ஈரான், தங்கள் இருத்தலுக்கு எப்போதும் அச்சுறுத்தல் என கருதி வரும் இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத தளங்கள் அனைத்தையும் தகர்க்க திட்டமிட்டது. இந்நிலையில் இஸ்ரேலின் இந்த அதிரடிக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அறிவித்தது. ‘அவர்கள் செய்த இந்தப் பெரிய குற்றத்தில் இருந்து அவர்கள் தப்பிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என்று ஈரான் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி அறிவித்திருந்தார். ஈரான் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல் மற்றும் ஈரானின் பதில் தாக்குதல், தீவிர போராக உருமாறும் வாய்ப்பு இருப்பதாக உலக நாடுகள் அச்சம் வெளியிட்டு உள்ளன. ஈரான் மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளும் விரைவில் போர் நிறுத்தம் செய்யுமாறும் வலியுறுத்தி உள்ளன. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு வழியான விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தங்கள் போர் விமானங்கள் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பை உடைத்துக்கொண்டு எளிதாக டெஹ்ரானை அடைந்து வருவதாகவும் இஸ்ரேல் தெரிவித்து வருகிறது.
இவ்வாறு இஸ்ரேலும், ஈரானும் தங்கள் தாக்குதலை தொடர்வதில் உறுதியாக இருப்பதால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இரண்டு முக்கிய எண்ணெய்க் கிடங்குகள் பற்றி எரிந்து வருவதாக ஈரானிய எண்ணெய் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.