கனடாவில் நடைபெற்ற ‘உதயன்’ சர்வதேச விருது விழாவில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது-இலங்கை ‘ என்னும் உயர் கௌரவத்தைப் பெறுவதற்காக கனடா வந்திருந்த இலங்கை வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு உலகின் நாலா பக்கங்களிலிருந்தும் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.
இவ்வாறான நிலையில் ஶ்ரீகஜன் அவர்களுக்கு வரவேற்பு உபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்த கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் மற்றும் கனடா தமிழ்க் கவிஞர்கள் கழகம் ஆகியவற்றின் முக்கிய உறுப்பினர்கள் திங்கட்கிழமையன்று 17ம் திகதி அன்றைய அவரது பிறந்த நாளை முன்னிட்டு ‘கேக்’ வெட்டி ஶ்ரீகஜன் அவர்களது பிறந்த நாளையும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் ரவி கனகசபை மற்றும் கனடா தமிழ்க் கவிஞர்கள் கழகத்தின் தலைவர் குமரகுரு கணபதிப்பிள்ளை ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பாராட்டு வைபவத்தில் கனடா வாழ் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விருந்துண்டு பாராட்டுரை வழங்கி மகிழ்ந்தனர். இலங்கை வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதனைக் கொண்டாடிய இலக்கிய நண்பர்கள் என்ற வகையில் அனைவரும் மகிழ்ச்சியோடு தங்கள் பரவசத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
அவர்கள் அனைவருக்கும் ஶ்ரீகஜன் அவர்கள் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.




























