இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழு அளவில் மற்றும் ஒட்டுமொத்தத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டிரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு தெரிவித்து உள்ளது. இதுபற்றி ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி கூறும்போது, போர் நிறுத்தம் பற்றியோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. போரை நிறுத்துவது பற்றிய இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும். அந்த முடிவை எங்களுடைய தலைவரே மேற்கொள்வார். வேறு நாடுகளின் தலையீட்டிற்கு இதில் அனுமதி இல்லை என கூறியுள்ளார். போரை மேற்கத்திய நாடுகளே தொடங்கின. அதனால், போரை நிறுத்துவது பற்றி ஈரானே முடிவு செய்யும். இஸ்ரேல் போரை நிறுத்தினால், நாங்களும் நிறுத்துவோம். ஈரான் மக்களுக்கு எதிரான சட்டவிரோத தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால், அதன்பின்னர் போரை தொடருவதற்கான எந்தவித உள்நோக்கமும் எங்களுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அராக்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா உள்ளது. ஆனால், ஐ.நா.வின் விதிகளை மீறி பெரும் தவறை செய்துள்ளது.. இந்நிலையில், போர்நிறுத்தம் பற்றிய டிரம்பின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், இதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்து உள்ளது.
























