” கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள்.எமது போராட்ட பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனோபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தைக் காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள். ஒரு கரும்புலிவீரன் தன்னைவிட தனது இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்தக் குறிக்கோளை அடைவதற்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான்”
கே.பாலா
கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ஆம் திகதி கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி கரும்புலி கப்டன் மில்லரின் வடமராட்சி நெல்லியடி இராணுவ முகாம் மீதான தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கியதையிட்டே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் 05.07.1993 அன்று ஜூலை 5ஆம் திகதி கரும்புலிகள் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து யாழ் குடா நாட்டை கைப்பற்றுவதற்காக இலங்கை இராணுவத்தினரால் 1987ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மிகப்பாரிய ஓப்ரேஷன் லிப்ரேஷன் இராணுவ நடவடிக்கை காரணமாக புலிகள் இராணுவ ரீதியான சவால்களை எதிர்கொண்ட வேளையில் அதனை முறியடிப்பதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனினால் தற்கொலைத் தாக்குதல் தந்திரோபாயம் திட்டமிடப்பட்டது.அதனடிப்படையில் கரும்புலியாக சென்று தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ள திலீபன் உட்பட புலிகளின் மூத்த தளபதிகள் பலர் போட்டியிட்ட போதிலும் மில்லர் என்ற போராளிக்கு அந்த வாய்ப்பு கிட்டியது.
1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலை கொண்டு குடாநாட்டை முற்றுகையிடுவதற்கான அடுத்த கட்ட தயார்படுத்தல்களை மேற்கொண்டு வந்த இலங்கை இராணுவத்தினர் மீது வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தில் சென்று கப்டன் மில்லரினால் கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலின் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதையடுத்து குடாநாட்டை கைப்பற்றும் திட்டமும் இராணுவத்தினரால் கைவிடப்பட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவத்தினர் மீது மில்லர் கரும்புலித் தாக்குதல் நடத்தி இன்று 38 ஆண்டுகள் கடந்துவிட்டன
05.07.1993 அன்று கரும்புலிகள் நாளை ஆரம்பித்து வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விடுத்த அறிக்கையில்,
”ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய தினத்தில் முழு இலங்கைத்தீவையும் அதிர வைத்த ஓர் சம்பவம் நிகழ்ந்தது. எமது விடுதலை இயக்கத்தின் முதலாவது கரும்புலி வீரன் கப்டன் மில்லர் ஓர் ஒப்பற்ற சாதனையை நிலைநாட்டினான்.எமது வீரவரலாற்றில் என்றுமே நிகழாத ஓர் அதிசயம் ஒன்று அன்று நிகழ்ந்தது.எதிரியின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த ஓர் இராணுவ முகாமை இந்த இளம்புலிவீரன் தனித்த ஒருவனாகச் சென்று தகர்த்தெறிந்தான். ஒரு பெரிய படையணியாலும் செய்ய முடியாத பாரிய இராணுவ சாதனையை தனிமனிதனாகச் சென்று இவன் சாதித்து முடித்தான். எரிமலையை சுமந்து சென்று எதிரியின் பாசறைக்குள் வெடிக்க வைத்தான்.இந்தப் பூகம்பமான தாக்குதல் நிகழ்வு அன்றைய வரலாற்றுச் சூழ்நிலையையே மாற்றியமைத்தது. எதிரியின் சைனியங்கள் நிலைகுலைந்து பின்வாங்கின. ஒரு பெரிய படையெடுப்பின் பேரழிவிலிருந்து யாழ்ப்பாணம் தப்பிக் கொண்டது. தனிமனிதனாக எமது போராளி ஒருவன் தன்னை அழித்து தனது தேசத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றினான்.
பலவீனமான எமது மக்களின் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள். எமது போராட்ட பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனோபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள். கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அபூர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும், பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தைக் காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள். ஒரு கரும்புலிவீரன் தன்னைவிட தனது இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்தக் குறிக்கோளை அடைவதற்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான்.
பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதிக்கு எதிரி. மனித பயங்களுக்கு எல்லாம் மூலமானது மரணபயம். இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன்தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகிறான்.கரும்புலிகள் பயத்தின் வேர்களைப் பிடுங்கி எறிந்தவர்கள். சாவு அவர்களிடம் சரணடைந்து விடுகிறது. மரணத்தின் நாளை அவர்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். சாவு பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. தம்மை அழிக்கும் அந்த இறுதி கணத்திலும் தம் இலக்கை அழிக்கும் நோக்கிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பர். இலட்சிய உறுதியில் அவர்கள் இரும்பு மனிதர்கள்.
மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே ஒரு போராட்ட வரலாற்றின் சக்கரத்தை சூழற்றுகிறது. பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்றுவாழும்.முகத்தை மறைத்து, பெயரையும் புகழையும் வெறுத்து இலட்சிய மூச்சாக தமிழீழ விடுதலைக் காற்றுடன் கலந்துவிட்ட இந்த சரித்திர நாயகர்களை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
1987ஆம் ஆண்டு ஆரம்பமான கரும்புலிகளின் சகாப்தத்தில் 2007 ஜூன் 27 வரை வரை விடுதலைப் புலிகள் வெளியிட்ட உத்தியோக பூர்வ தகவல்களின் அடிப்படையில் 322 கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இவர்களில் 81 பேர் தரைக்கரும்புலிகளாகவும் 241 பேர் கடற்கரும்புலிகளாகவும் உள்ளனர். அதேவேளை இறுதி யுத்தம் இடம்பெற்று 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி ஆயுதங்களை மௌனிப்பதாக விடுதலைப்புலிகள் புலிகள் அறிவிக்கும் வரையான காலப்பகுதியில் இன்னும் நூற்றுக்கணக்கான கரும்புலிகள் வீரச் சாவடைந்திருந்தனர்.
விடுதலைப் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாகவே கரும்புலிகள் காணப்பட்டார்கள். எந்த ஆயுதங்களினாலும் வெற்றி கொள்ளப்பட முடியாததும் எந்த தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாததும் எந்த அரச,இராணுவ இயந்திரங்களினாலும் அடக்க முடியாததும் தான் கரும்புலிகளின் மனோபலம். தரை, கடல், வானம் என தமிழீழத்திற்கு உள்ளே, தமிழீழத்திற்கு வெளியே என எங்கெங்கு எல்லாம் எதிரிகள் இருந்தார்களோ அங்கங்கு வைத்தே அவர்களின் ஆணிவேர்களைப் பிடுங்கி தமிழ் மக்களின் தமிழீழ தாயக தாகத்தை இந்த உலகின் முற்றத்தில் பேரிடியாக முழங்கியவர்கள் கரும்புலிகள்.
எத்தனையோ கரும்புலிகள் தமது முகத்தையோ, முகவரியையோ, காட்டாமல், தமக்கென சுயநல பெருமை தேடாமல் தமிழ்த் தேசத்தின் இருப்பை நிலை நாட்ட அடையாளம் மறைத்து தமிழீழ விடுதலைக்கு தமது அர்ப்பணிப்பாலும் செயலாலும் தம்மை உரமாக்கி தமிழினத்தின் வரலாற்றில் தம்மை அழியாத அடையாளமாய் இட்டுச் சென்றுள்ளார்கள்.இமாலய சாதனைகளை படைத்து வீரகாவியமாகி இன்றும் வெளியில் தெரியா வீர மறவர்களாக ஈழவரலாற்றுப் பக்கங்களில் மறைந்து கிடக்கும் தேசப்புயல்கள் கரும்புலிகள்.
விடுதலைப்புலிகளின் கரும்புலிகளின் படைப்பிரிவில் தரைக் கரும்புலிகள், கடற் கரும்புலிகள், வான் கரும்புலிகள், முகம் தெரியாக் கரும்புலிகள் என்ற 4 பிரிவுகள் இருந்தன. இந்த நான்கிலும் ஆண்,பெண் கரும்புலிகள் உள்ளடங்கியிருந்தனர். தமிழீழ விடுதலைக்கான விடுதலைப்புலிகள் போராட்டத்தில் முதல் தரைக்கரும்புலித்தாக்குதல் 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி கரும்புலி கப்டன் மில்லரினால் வடமராட்டி நெல்லியடி இராணுவ முகாம் மீது நடத்தப்பட்டது. இராணுவ முகாம் நிர்மூலமாக்கப்பட்டதுடன் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
முதல் கடற்கரும்புலித் தாக்குதல் 10.07.1990 அன்று இலங்கை கடற்படைக்கு எதிராக முதல் கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோரால் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரின் P 715 “எடித்தாரா” கட்டளைக் கப்பல் மீது நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் அக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதுடன் பல கடற்படையினர் கொல்லப்பட்டனர். முதல் வான் கரும்புலித் தாக்குதல் 20.02.2009 அன்று இலங்கை விமானப்படைத் படைத் தலைமையகம் மற்றும் கட்டுநாயக்கா விமானத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் வான் கரும்புலிகளான கேணல். ரூபன் , லெப்.கேணல். சிரித்திரன் ஆகியோரால் நடத்தப்பட்டது.
வீரச்சாவடையும் கரும்புலிகளுக்கு இராணுவநிலையோடு அவர்களின் வீரச்சாவு அறிவிக்கப்படும். வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும். நினைவுநாட்களில் அவர்களின் பெயர், அடையாளங்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டு உரிய மரியாதையும், கெளரவமும் வழங்கப்பட்டு கல்லறையிலோ, நினைவுக்கல்லிலோ நினைவுகூரப்படுவர். ஆனால் இவையெதுவும் கிடைக்காமலும் பலர் போராட்டத்துக்காக உயிரை அர்ப்பணித்துள்ளனர்.இவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்பட மாட்டாது. கல்லறைகளோ, நினைவுக்கற்களோ இவர்களுக்காக இருக்காது. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெறமாட்டாது. சம்பந்தப்பட்ட சிலருடன் மட்டும் உறங்கிப்போகும் உண்மைகள் இவர்கள். இவர்களே ‘முகம் தெரியாக் கரும்புலிகள்’.
இதேவேளை முதல் ஆண் தரைக் கரும்புலியாக 05-07-1987 ஆம் ஆண்டு கப்டன் மில்லரும் முதல் பெண் தரைக் கரும்புலியாக 10-06-1997 ஆம் ஆண்டு மேஜர் யாழினியும் முதல் ஆண் கடற்கரும்புலிகளாக 10.07.1990 ஆம் ஆண்டு மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோரும் முதல் பெண் கடற்கரும்புலியாக 16-08-1994 ஆம் ஆண்டு கப்டன் அங்கயற்கண்ணியும் முதல் ஆண் வான் கரும்புலிகளாக 20.02.2009 ஆம் ஆண்டு கேணல். ரூபன் , லெப்.கேணல். சிரித்திரன் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் கரும்புலிப்படையணிகளின் தாக்குதல்களில் 02-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் ,24 -07-2001 அன்று கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் மற்றும் விமானப் படைத்தளம் மீது நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல், 22-10 2007அன்று அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீது நடத்தப்பட்ட ”எல்லாளன் ”கரும்புலித் தாக்குதல் என்பன முழு உலகத்தையும் அதிர வைத்த கரும்புலித் தாக்குதல்களாக அமைந்தன.
இதில் பலாலி விமானப்படைத் தளம் மீது நடத்தப்பட்ட கரும்புலித்தாக்குதலில் ‘பெல் 212 ‘ ரக ஹெலிகொப்டர் .பவள் கவச வாகனம் என்பன அழிக்கப்பட்டதுடன் படையினர் சிலரும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் 5கரும்புலிகள் வீரச் சாவடைந்தனர்.
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் மற்றும் விமானப் படைத்தளம் மீது நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலில் இரண்டு எ (A) – 340 – 300 பயணிகள் விமானங்கள்,ஒரு எ (A) – 330 -200 பயணிகள் விமானம்,நான்கு கிபிர் போர் விமானங்கள்,மூன்று கே (K)-8 பயிற்சி விமானங்கள்,இரண்டு எம்.ஜ.ஜி (MIG) – 27 ஜெட் போர் விமானங்கள்,இரண்டு பெல் (bell) 412 ஹெலிகொப்டர்கள் இரண்டு வி.வி.ஜ.பி (VVIP) 412 ஹெலிகொப்டர்கள்,இரண்டு எம்.ஜ (MI) -17 ஹெலிகொப்டர்கள் அழிக்கப்பட்டதுடன் இரண்டு – A-320 பயணிகள் விமானங்கள்,ஒரு – A-340 பயணிகள் விமானம்,ஒரு அன்டனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்,ஒரு எம்.ஜ (Mi) -24 ஹெலிகொப்டர்,ஒரு பெல் (Bell) 412 ஹெலிகொப்டர்,நான்கு கிபிர் போர் விமானங்கள் சேதமாக்கப்பட்டன.
இலங்கையின் சர்வதேச விமான நிலையத்திலும் அதனோடு இணைந்திருந்த விமானப்படைத்தளம் மீதும் இந்த கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஒரு பொதுமகனுக்கு கூட காயம் ஏற்படாத வகையில் நன்கு திட்டமிடப்பட்டு மிகத்துல்லியமாக கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது. இது உலகலாவிய ரீதியில் பெரும் கவனம் பெற்றதுடன் இலக்கை மட்டுமே அழிக்கும் கரும்புலிகளின் திறனையும் உலகிற்கு வெளிச்சமிட்டது. இத்தாக்குதலில் 14 முகம் தெரியாக் கரும்புலிகள் வெற்றிக்கு வித்திட்டு காற்றில் கலந்தனர்.
அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீது நடத்தப்பட்ட ”எல்லாளன் ”கரும்புலித் தாக்குதலில் எம்.ஐ-24 ஹெலிகொப்டர்கள்- 2, எம்.ஐ-17 ஹெலிகொப்டர் – 1,பெல்-212 ஹெலிகொப்டர் – 1,பீச் கிராப்ட் விமானம் – 1,கே -8 பயிற்சி விமானம் – 1 பிரி-6 ரக சண்டைப் பயிற்சி விமானங்கள் – 4 ஆளில்லா வேவு விமானம் – 3 என்பன அழிக்கப்பட்டதுடன் ஆளில்லா வேவு விமான ம்-1,மில் எம்.ஐ.-24 ரக யுத்த ஹெலிகொப்டர்-1,கே-8 ரக அதிவேக யுத்த பயிற்சி விமானங்கள்-5,பிரி-6 ரக சண்டைப் பயிற்சி விமானங்கள்-3.சியா மாசெட்டி ரக குண்டு வீச்சு விமானங்கள்-4 என்பன பாரியளவில் சேதமாக்கப்பட்டன.
இந்த தாக்குதலில் தரைக்கரும்புலிகளுடன் வான்புலிகளின் இரு விமானங்களும் விமானத்தளம் மீது குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியிருந்தன. இத்தாக்குதலில் 3 பெண் கரும்புலிகள் உட்பட 21 கரும்புலிகள் வீரச் சாவடைந்தனர். விமானப்படையினரில் உயரதிகாரிகள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது இவ்வாறு எமது விடுதலைப் போராட்டத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த கரும்புலிகளின் வீர வரலாறுகளைக் கூறிக்கொண்டே போக முடியும். பல ஆண்டுகளாக எதிரியின் மத்தியில் உலவி, தேசிய விடுதலையை மட்டுமே தமது தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராமல், தமது பாதையில் எத்தடை வரினும் அதை உடைத்தெறிந்து தமது கடமையை செய்த நெருப்பு மனிதர்கள் கரும்புலிகள். பூகம்ப அதிர்வாக குமுறிய எமது போராட்டத்தின் உக்கிரத்தை உலகத்திற்கு உணர்த்தியவர்கள் கரும்புலிகள் .சாவுக்கு விலங்கிட்டு புதிய சரித்திரம் படைத்து எமது சந்ததியின் விடிவுக்கு விளக்கேற்ற தம்மை நெருப்பாக்கியவர்கள். அவர்களின் புனித தினமாகிய ஜூலை 5 ஆம் திகதி வரையப் படாத சித்திரங்களாகவும் எழுதப்படாத சரித்திரங்களாகவும் எமது வாழ்வுக்காக தமது வாழ்வைத் துறந்த அந்த அற்புதமான தியாகிகளை எமது நெஞ்சில் நிறுத்தி வணங்குவோம்.
























