மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் மு.கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க. முத்து. கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று காலை 8 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77. அவர் அணையா விளக்கு. பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதில், பிள்ளையோ பிள்ளை படம் அவருடைய தந்தை கருணாநிதி கைவண்ணத்தில் உருவானது. கலைவாரிசாக மு.க. முத்துவை முன்னிறுத்த கருணாநிதி முயன்றார். ஒரு சில படங்களில் நடித்த அவர் பின்னர், பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. அரசியல் பணிகளிலும் விருப்பம் இல்லாமல் ஒதுங்கி கொண்டார். தற்போது சென்னை ஈச்சம்பாக்கத்தில் மு.க.முத்துவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.முத்துவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மு.க.முத்து மறைவு காரணமாக திமுகவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மு.க.முத்து காலமானதையொட்டி அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
























