உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் ஸ்ரீராம் மற்றும் குளோபல் என 2 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த 2 பள்ளிகளுக்கும் மின்அஞ்சல் வழியே வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதுபற்றி உதவி காவல்துறை ஆணையர் விநாயக் போசாலே கூறும்போது, பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என மிரட்டல் மின்அஞ்சல் வந்ததும், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர், மோப்ப நாய் குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று முழு அளவில் பரிசோதனை செய்தனர். எனினும், 2 பள்ளிகளிலும் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என கூறியுள்ளார். இதனால், வழக்கம்போல் கல்வி பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. மாணவர்கள் வழக்கம்போல் படிப்பை தொடர்ந்து வருகின்றனர். மின்அஞ்சல் யாரிடம் இருந்து மற்றும் எந்த இடத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என இணையதள குழுவினர் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கொல்கத்தா நகரில் இருந்து மின்அஞ்சல் வந்துள்ளது என தெரிய வந்துள்ளது. குற்றவாளிகளை கண்டறிய தொடர்ந்து நீண்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
























