புதுவைக்கு வந்த முன்னாள் ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதலமைச்சர் ரங்கசாமியிடம் தங்களின் ஆசி தனக்கு அரசியலிலும் தேவை என தெரிவித்தார். இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி, அவருக்கு வாழ்த்து கூறினார். பின்னர் முன்னாள் ஆளுனர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே வருகிற 2026-ம் ஆண்டில் பயணிக்கும். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற சில வழிமுறைகள் உள்ளது. நடைமுறை என்னவோ அதையொட்டி மத்திய அரசு செயலாற்றும். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுவேன் என கூறும் திருமாவளவன் போன்றோர், ஆணவ கொலைகளை அனுமதித்து கொண்டிருக்கின்றனர். அதற்கான கண்டனத்தை கூறுகிறார்களே தவிர, ஆட்சியின் மீது கடுமையான விமர்சனம் வைக்க தயங்குகின்றனர். ஆணவ கொலைகள் தடுக்கப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலிமையாக இவர்கள் சொல்வதில்லை. ஆணவ படுகொலை விவகாரங்களில் திருமாவளவன் பதுங்குகிறார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல் துறையினரே கொலை செய்யப்படுகின்றனர். போலீஸ் நிலையத்தில் ஒரு தற்கொலை நடந்துள்ளது மிகவும் வேதனையாக உள்ளது. தமிழகத்தில் விளம்பர அரசியல் தான் நடக்கிறது. வளர்ச்சியடைந்த பாரதம் என்ற மத்திய அரசு திட்டத்தின் காப்பி தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம். கடந்த 4 ½ ஆண்டுகளாக தமிழக ஆட்சியாளர்கள் மக்கள் குறையை தீர்க்காமல், கேட்காமல் என்ன செய்தார்கள்.? என மக்கள் கேள்வி கேட்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.






















