2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அடுத்த மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.
தற்போது, 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்படவுள்ளது. கலைமாமணி விருது வழங்கக்கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் இதர கலைப் பிரிவுகள் என கலைப் பிரிவு வாரியாக பிரிக்கப்பட்டு, கலைமாமணி விருது பெறத் தகுதியுள்ள கலைஞர்களைத் தேர்வு செய்திட கலைப் பிரிவு வாரியாக வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன. மேற்படி வல்லுநர் குழுக்களால் அளிக்கப்பட்ட தகுதியுள்ள கலைஞர்களின் பெயர்ப் பட்டியல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் பரிந்துரையை ஏற்று 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர் பட்டியல் இணைப்பில் கண்டவாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அறிவித்துள்ளது. இந்த கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும். மேலும், பாரதியார். எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் கலை வித்தகர்களுக்கான அகில இந்திய விருதுகளும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
























