புலனாய்வாளர் சுதர்சனுக்கு 20 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்குவதற்கு சந்தேகநபர்கள் முயன்றபோதும் இலஞ்சத்தை வாங்காமல் கடமையை செய்ததனால் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்!
பு.கஜிந்தன்
22ம் திகதி புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் ஐஸுடனும், மற்றையவர் ஐஸ் மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 மற்றும் 25 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரையும் 23ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, வாள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். ஐஸுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 25ஆம் திகதிவரை பொலிஸ் தடுப்புகாவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை கைது செய்ய முற்பட்டபோது பொலிஸ் புலனாய்வாளர் சுதர்சனுக்கு 20 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்குவதற்கு சந்தேகநபர்கள் முயன்றனர். இருப்பினும் குறித்த பொலிஸ் புலனாய்வாளர் அந்த இலஞ்சத்தை வாங்காமல் கடமையை நேர்த்தியாக செய்ததனால் அவரை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
























